மாத இறுதிக்குள் சாதகமான முடிவு ஏற்படுமென நம்பிக்கை, பேச்சுவார்த்தையூடாக தீர்வு காண்பதே எனது நிலைப்பாடு என்கிறார் நீதி அமைச்சர் அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 23, 2020

மாத இறுதிக்குள் சாதகமான முடிவு ஏற்படுமென நம்பிக்கை, பேச்சுவார்த்தையூடாக தீர்வு காண்பதே எனது நிலைப்பாடு என்கிறார் நீதி அமைச்சர் அலி சப்ரி

கொரோனா வைரஸால் மரணிப்பவர்களை புதைக்கும் விவகாரத்திற்கு தீர்க்கமான முடிவு காணப்பட வேண்டுமென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

காலி நீதிமன்ற கட்டடத் தொகுதி பணிகளை பார்வையிடுவதற்காக அமைச்சர் நேற்று காலிக்கு விஜயம் செய்திருந்தார். 

இதனை தொடர்ந்து கொரோனா பரவலினால் மரணிப்பவர்களின் சடலங்களை பாதுகாத்து வைக்கும் விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, கொரோனா மாரணங்களை புதைப்பது தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. மருத்துவர்கள், நிபுணர்கள் போன்றோரின் கருத்தை பெற்று இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இந்தப் பிரச்சினையை பேச்சுவார்த்தையூடான சாதகமான முடிவின் நிலைபாட்டிலேயே நான் இருக்கிறேன்.

கொரோனா பரவலினால் மரணிப்பவர்களின் சடலங்களை குளிர் அறைகளில் வைப்பது தொடர்பில் பிரச்சினையிருந்தால் சுகாதார அமைச்சு அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு எட்டப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் ரமேஷ் பத்திரண உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை அடக்கம் செய்ய அனுமதி கோரும் விடயத்தை மனிதாபிமான ரீதியில் மீளாய்வு செய்யுமாறு நிபுணர்குழுவிற்கு அரசாங்கம் அறிவித்துள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரண கூறியிருந்தார்.

இந்த நிலையில் நிபுணர் குழுவிற்கும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிற்குமிடையில் நேற்று அமைச்சில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றதாக அறியவருகிறது.

இதேவேளை இந்த மாத இறுதிக்குள் இந்த விடயம் தொடர்பில் சாதகமான முடிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பது, தவறு என்பதை நான் இதற்கு முன்னரும் உறுதியாக குறிப்பிட்டிருந்தேன். சர்வதேச ஊடகமும் இதனை ஒளிபரப்பியிருந்தது. இதனால் நான் கடும்போக்கு பௌத்த குருமார்களிடம் எதிர்ப்பை சம்பாதித்தேன். அவர்களுக்கு எதிராக நான் தொடர்ந்த வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது.

அன்றும், இன்றும் எனது நிலைப்பாடு ஒன்றானதே ஆம். முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை தவிருங்கள் என்பதே எனது வாதமாகும். இதுபற்றி ஜனாதிபதியுடன் தனிப்பட்ட முறையில் உரையாடியுள்ளேன்.

ஜனாஸாக்களை எரிப்பதை தடுக்குமாறு, நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. நாங்களும் மறுபுறும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

சுகாதாரத் தரப்பினரின் முழு சம்மதத்துடன், கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை புதைப்பதால், பாதிப்பு இல்லை என்ற பொது நிலைப்பாட்டுக்கு முதலில் வந்து, அதன் பின்னர் கொரோனாவில் இறந்த உடல்களை நல்லடக்கம் செய்வதற்கான, சட்ட ரீதியான அனுமதியைப் பெற்றுக் கொள்வதே எமது நிலைப்பாடாகும்.

இந்த வழிமுறையின் மூலம், ஜனாஸாக்களை எரிப்பது தவிர்க்கப்படும். எந்தத் தரப்பும் எதிர்ப்பும் வெளியிடாத நிலையும் உருவாகும். இதனை தூரநோக்கோடு அணுகுவதே, சிறந்த உபாயமாகும்.

சுகாதாரத் தரப்பினரும், இதுபற்றிய மீளாய்வு ஒன்றை விரைவில் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். நாங்கள் இந்த நேரத்தில் எந்தத் தரப்பினர் மீது பகிரங்கமாக சமூகத் தளங்களில் குற்றம் சுமத்துவதை கைவிட்டு, புத்தி சாதூர்யமாக காரியங்களைச் செய்ய வேண்டும்.

நாம் எந்தத் தரப்பும் மீது குற்றம் சுமத்தினால், அது எதிர்காலத்தில் எமது சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்வது சிறந்தது எனவும் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment