(நா.தனுஜா)
உயர் நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீப்பரவலுக்கான உறுதியான காரணம் என்ன என்பதை வெளிப்படுத்துவதற்கான விரிவான விசாரணைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியிருக்கிறது.
கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவின் புதுக்கடை பகுதியில் அமைந்துள்ள உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீப்பரவலுக்கு, எரிபொருள் வீச்சோ அல்லது மின் கசிவோ காரணமில்லை என்று உறுதியாகியிருப்பதாக அரச இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இவ்விடயம் தொடர்பில் மேலும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது இம்மாத ஆரம்பத்தில் உயர் நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீப்பரவலுக்கான காரணம் தொடர்பில் மேலும் விரிவானதும் விரைவானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
மின் கசிவின் காரணமாக தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்பதை பொலிஸார் நிராகரித்திருந்தாலும், நாட்டின் மீயுயர் நீதிமன்றமொன்றில் ஏற்பட்ட இந்தத் தீப்பரவலுக்கு உண்மையான காரணம் என்னவென்பதை அவர்களால் கண்டறிய முடியாமல் போயிருக்கின்றது.
தனியொரு நபர் சிகரெட்டை புகைத்துவிட்டு, அதனை முறையாக அணைப்பதற்குத் தவறியமையின் விளைவாக தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகித்தாலும், அதனையும் அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.
உயர் நீதிமன்றம் உயர் பாதுகாப்பு வளாகத்தில் அமைந்துள்ளது. அங்கு ஏற்பட்ட தீப்பரவலால் அங்கிருந்த ஆவணங்களுக்கு சேதம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உருவானது.
ஆகவே தீப்பரவலுக்கான உறுதியான காரணம் என்னவென்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment