(இராஜதுரை ஹஷான்)
மாகாண சபைகளின் நிர்வாகம் ஆளுநர்களினாலும், அரச அதிகாரிகளினாலும் முன்னெடுக்கப்படுவது ஜனநாயக கோட்பாட்டுக்கு முரணானது என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று (28.12.2020) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாண சபை தேர்தல் குறித்து மாறுப்பட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. மாகாண சபை தேர்தல் உரிய காலத்தில் இடம்பெற்றிருந்தால் மாகாண சபைக்கு எதிரான கருத்துக்கள் தற்போது தோற்றம் பெற்றிருக்காது.
மாகாண சபை தேர்தல் குறித்து அரசாங்கம் விரைவில் உறுதியான தீர்மானத்தை எடுக்கும். மாகாண சபை நிர்வாகம் ஆளுநர் உட்பட அரச அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படுவது ஜனநாயக கொள்கைக்கு முரணானது என்பதில் பொதுஜன பெரமுன கட்சி உறுதியாக உள்ளது.
துறைமுகம் மட்டுமன்றி நாட்டின் எந்த வளங்களையும் விற்பனை செய்யும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது. நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்த அரசாங்கம் கடந்த நல்லாட்சி அரசாங்கமாகும். துறைமுகம் உட்பட எதனையும் விற்பனை செய்ய எமக்கு எந்தவித திட்டமும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
பல்வேறு தரப்புகளுடன் நாம் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து பேச்சு நடத்துகின்றோம். எதனையும் விற்பனை செய்வதில்லை என்ற வாக்குறுதியைத்தான் அரசாங்கம் எல்லா சந்தர்ப்பத்திலும் மக்களுக்கு வழங்கியிருக்கின்றது.
எமது நாட்டிற்கு முதலீடுகள் அவசியமாகும். மிகவும் சிறப்பாக செயற்பட்ட பொருளாதாரத்தை வீழ்ச்சிபெறச் செய்து மீண்டும் குண்டுவெடிப்பு நிகழும் நாடாக கடந்த அரசாங்கம் நாட்டை மாற்றியது.
அதனிடையே ஏற்பட்ட சவாலுக்கு மத்தியில்தான் எமது அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றது. அந்த வகையில் இந்த நாட்டிலுள்ள எந்த சொத்துக்களையும் விற்பனை செய்ய மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கம் செய்த தவறை தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தால் மக்கள் ஜனநாயக ரீதியில் பாடம் புகட்டுவார்கள். ஆகவே மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது என்றார்.
No comments:
Post a Comment