புதிய வகை வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதால் கடுமையான சுகாதார பாதுகாப்பு விதிமுறைகள் அவசியம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 29, 2020

புதிய வகை வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதால் கடுமையான சுகாதார பாதுகாப்பு விதிமுறைகள் அவசியம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

ஐரோப்பிய நாடுகளில் மாத்திரமின்றி ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகள் சிலவற்றிலும் புதிய வகை வைரஸ் பெருமளவில் இனங்காணப்பட்டுள்ளது. எனவே இதன் பாதிப்பிலிருந்து நாம் தப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவானதாகும். இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் இலங்கையில் மேலும் கடுமையான சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், எவ்வாறான புதிய வகை வைரஸ் தோன்றினாலும் அடிப்படை சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் அவற்றிலிருந்தும் எம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

புதிய வகை வைரஸ் இளைஞர் மத்தியிலேயே தீவிரமாகப் பரவலடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அத்தோடு வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அபாயம் அதிகமாகும்.

இலங்கையில், தொற்றுக்குள்ளானோரில் 80 சதவீதமானோர் குணமடைந்துள்ளனர். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது எமது நாட்டில் மரணங்களின் எண்ணிக்கை குறைவாகும். எனினும் கொழும்பு மாவட்டத்தில் வைரஸ் பரவல் கொழும்பு மாநகர சபையிலேயே மையம் கொண்டிருந்தது.

எனினும், தற்போது அவிசாவளை போன்ற பகுதிகளிலும் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதிலிருந்து கொழும்பு மாநகர சபையில் காணப்பட்ட அபாயம் ஏனைய பகுதிகளுக்கு பரவியுள்ளமை தெளிவாகியுள்ளது. எனவே, ஏனைய பகுதிகள் தொடர்பில் எப்போதும் அவதானமாக இருக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும். 

எனினும் தற்போது அட்டலுகம குறித்து தொற்று நோயியல் பிரிவு எந்த கருத்தையும் தெரிவிப்பதில்லை. அங்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா இல்லையா என்பதும் தெளிவில்லை. இவ்வாறு பொறுப்பற்று செயற்படுவது மேலும் அபாய நிலைக்கே நாட்டை இட்டுச் செல்லும். எவ்வாறிருப்பினும் இவ்வாறான நிலைமைகளிலிருந்து நாட்டை மீட்பதற்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்பே அத்தியாவசியமானதாகும் என்றார்.

No comments:

Post a Comment