வாடகைக்கு கார்களை பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் கைது - News View

Breaking

Post Top Ad

Thursday, December 24, 2020

வாடகைக்கு கார்களை பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் கைது

(செ.தேன்மொழி)

வாடகைக்கு பெற்றுக் கொண்ட கார்களை உரிமையாளர்களுக்கு ஒப்படைக்காமல் அவற்றை வேறு நபர்களிடம் அடகு வைத்து, மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் பொலிஸ் அத்தியட்சகரின் காரியாலயத்திற்கு கடந்த திங்கட்கிழமை கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய அநுராதபுரம் குற்றப் புலனாய்வு பிரிவினர் அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதற்கமைய நேற்று (23) புதன்கிழமை குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர் சிலாபம் பகுதியைச் சேர்ந்த பிரிதொரு நபரிடம் 70 ஆயிரம் ரூபாய் தொகைக்கு மாதாந்த வாடகை அடிப்படையில் கார் ஒன்றை பெற்றுக் கொண்டுள்ளார். அந்த காரை உரிய காலத்தில் உரிமையாளரிடம் ஒப்படைக்காமல், மோசடி செய்து வந்ததாக காரின் உரிமையாளர் முறைப்பாடு அளித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வு பிரிவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர் வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்ட காரை அநுராதபுரம் - விஜயபுர பகுதியைச் சேர்ந்த நபரொருவரிடம் ஒரு இலட்சம் ரூபாய்க்கு அடகு வைத்துள்ளதாகவும் புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேக நபரினால் இவ்வாறு வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டு அடகு வைக்கப்பட்ட மேலும் நான்கு கார்களையும் கைப்பற்றியுள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad