ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினுள் பொலிஸ் நிலையம் நிர்மாணிக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினுள் பொலிஸ் நிலையம் நிர்மாணிக்கப்பட்டது

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச துறைமுகத்தினுள் புதிய பொலிஸ் நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. புதிய பொலிஸ் நிலையத்தில் 40 இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் சேவையாற்றக் கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச துறைமுகத்தின் புதிய பொலிஸ் நிலையம் தென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஹான் சில்வாவின் பங்குபற்றுதலுடன் துறைமுக வளாகத்தினுள் திறந்து வைக்கப்பட்டது.

துறைமுகத்தினுள் ஆரம்பத்திலிருந்து இருந்த வந்த சிறிய பொலிஸ் நிலையத்திற்கு பதிலாகவே சகல நவீன வசதிகளுடன் கூடிய 2050 சதுர அடிகளைக் கொண்ட புதிய பொலிஸ் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

கொவிட்-19 கொரோனா தொற்றிற்கு மத்தியிலும் துறைமுகத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கபட்டு வரும் சந்தர்ப்பத்திலேயே இந்த புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் சேவை பிரிவின் பிரதான நிறைவேற்று அதிகாரி கப்டன் ரவீ ஜயவிக்கிரம இங்கு உரையாற்றும் போது "துறைமுகத்தின் செயற்பாடுகள் அதிகரித்து செல்லும் காலப் பகுதியில் நவீன வசதிகளுடனான ஒரு பொலிஸ் நிலையத்தின் தேவை உணரப்பட்டதால் இந்த பொலிஸ் நிலையத்தினை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.

துறைமுகத்தினுள் மேற்கொள்ளப்படும் சேவைகளை மேலும் விஸ்தரிப்பதற்கு இந்த பொலிஸ் நிலையத்தினூடாக சந்தர்ப்பம் ஏற்படவுள்ளது. இந்த பொலிஸ் நிலையத்தில் கைதிகளை தடுத்து வைக்கும் அறை, காரியாலயம் மற்றும் தங்குமிட வசதிகள் என்பனவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

இலங்கையின் சட்டத்திற்கு அமைய சகல துறைமுகங்களிலும் பொலிஸ் நிலையமொன்று கட்டாயமாக இருக்க வேண்டும். இதனால்தான் நாமும் இங்கிருந்த சிறிய பொலிஸ் நிலையத்திற்கு பதிலாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்களது கடமைகளை தங்குதடையின்றி வசதியாக மேற்கொள்வதற்காக சகல நவீன வசதிகளையும் கொண்ட பொலிஸ் நிலையமொன்றினை நிர்மாணித்தோம்" எனத் தெரிவித்தார்.

இர்பான் ஸக்காரியா - ஹம்பாந்தோட்டை நிருபர்

No comments:

Post a Comment