(எம்.மனோசித்ரா)
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களில் தொற்றுக்கு உள்ளானவர்களை இனங்காண்பதற்கு முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளின் பிரதிபலன்களை ஜனவரி மாதத்தின் இடைப்பகுதியிலேயே அறிந்து கொள்ள முடியும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹிரத அலுத்கே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்திலுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறுபவர்களுக்கு 11 இடங்களில் எழுமாறாக ரெப்பிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன்போது 1000 பரிசோதனைகளில் 41 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் நூற்றுக்கு 0.5 சதவீதமானோருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திலிருந்து சுமார் 20000 பேர் பொதுப் போக்குவரத்தினூடாகவும், தனி வாகனங்கள் ஊடாகவும் வெளி பிரதேசங்களுக்குச் செல்கின்றனர். அதற்கமைய 1000 பேரில் ஐவருக்கு தொற்று உறுதிப்படுகின்றது என்றால் 10000 பேரில் 50 பேருக்கும் 20000 பேரில் 1000 பேருக்கும் தொற்று காணப்படலாம்
அவ்வாறெனில் நேரடியாக ஏனையோருக்கு தொற்றை ஏற்படுத்தக் கூடிய 100 தொற்றாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியிருக்கக் கூடும். அவ்வாறு சென்றவர்களால் வெளிப் பிரதேசங்களில் தொற்று பரவலுக்கான அபாயம் காணப்படுகிறது.
எனவே ஜனவரி மாதத்தின் இடைப்பகுதியிலேயே நாம் எவ்வாறு பாதுகாப்பான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றோம் என்பதை மதிப்பிட்டுக் கொள்ள முடியும்.
ஜனவரியில் பாடசாலைகளை மீளத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு சுற்றுலாத்துறையும் ஆரம்பமாகவுள்ளது. அத்தோடு மார்ச்சில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளும் இடம்பெறவுள்ளன.
தற்போது எம்மால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் பிரதிபலன் ஜனவரி மாதத்தின் இடைப்பகுதியில் கிடைக்கும் போதே இவை அனைத்தையும் திட்டமிட்டபடி முன்னெடுக்க முடியுமா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்றார்.
No comments:
Post a Comment