(இராஜதுரை ஹஷான்)
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது. ஒரு நாடு - ஒரு சட்டம் என்ற கொள்கைக்கு அமைய மாகாண சபை முறைமை நீக்கப்பட வேண்டும். இவ்விடயம் குறித்து அரசாங்கம் வெகுவிரைவில் உறுதியான தீர்மானத்தை எடுக்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் எண்ணக்கரு ஒரே நாடு ஒரே சட்டம் என்றால் 9 மாகாணங்களுக்கு 9 சட்டங்கள் இருக்கக் கூடாது. இதனால் மாகாண சபைத் தேர்தலை எதிர்க்கின்றேன். இது அரசாங்கம் எடுக்க வேண்டிய தீர்மானமாகும். அந்தத் தீர்மானத்தை அரசாங்கம் வெகுவிரைவில் எடுக்குமென எதிர்பார்க்கின்றேன்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் ஆரம்ப கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது. மாகாண சபைகளுடன் சம்பந்தப்பட்ட விடயதானங்கள் குறித்து அந்த புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகள் தொடர்பான சட்டதிட்டங்கள் கொண்டுவரப்படலாம் என்பதால் புதிய அரசியலமைப்பு கொண்டு வரும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது என்றார்.
மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசாங்கத்துக்குள் இரு வேறுபட்ட நிலைப்பாடு காணப்படுகிறது. மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என ஒரு தரப்பினரும், மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது என பிறிதொரு தரப்பினரும் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.
மாகாண சபைத் தேர்தலை எந்த தேர்தல் முறையில் நடத்துவது என்ற கேள்வி காணப்படுகிறது. இம்முறை மாத்திரம் மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமையில் நடத்தி பிற்பட்ட காலத்தில் புதிய தேர்தல் முறைமையில் நடத்த தேவையான திருத்தங்களை முன்னெடுக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பிரதமரிடம் குறிப்பிட்டுள்ளார்கள்.
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் கடந்த 14 ஆம் திகதி அமைச்சரவை கூட்டத்தில் யோசனை முன்னைத்தார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை யோசனை குறித்து எவ்வித தீர்மானங்களும் அமைச்சரவை மட்டத்தில் எடுக்கப்படவில்லை.
மாகாண சபைத் தேர்தல் முறைமை மற்றும் தேர்தலை நடத்தும் காலம் தொடர்பில் அரசியல் கட்சித் தலைவர் கூட்டத்தில் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்குமாறு குறிப்பிடப்பட்டது. எவ்வாறாயினும் மாகாண சபைத் தேர்தலை மார்ச் மாதம் நடத்துவது உறுதி என அமைச்சரவை பேச்சாளர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment