அரசாங்கத்திலிருந்து சுதந்திர கட்சி விலகப் போவதாகக் கூறுவதில் எவ்வித உண்மையுமில்லை, புறக்கணிக்கப்படுவது அதிருப்தியளிக்கிறது என்கிறார் தயாசிறி ஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Sunday, December 27, 2020

அரசாங்கத்திலிருந்து சுதந்திர கட்சி விலகப் போவதாகக் கூறுவதில் எவ்வித உண்மையுமில்லை, புறக்கணிக்கப்படுவது அதிருப்தியளிக்கிறது என்கிறார் தயாசிறி ஜயசேகர

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகப் போவதாகக் கூறுவதில் எவ்வித உண்மையும் கிடையாது. அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. எனினும் சில அபிவிருத்தி திட்டங்களில் கீழ் மட்டத்திலும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுகின்றமை அதிருப்தியளிக்கிறது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அரசாங்கத்திலிருந்து கொண்டு அதற்கெதிராகவே சிலர் சூழ்ச்சிகளை செய்வதாகவும், 2015 இல் தேசிய அரசாங்கத்தில் இணைந்து தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக சுதந்திர கட்சி செயற்பட்டமை மறக்கக்கூடிய விடயமல்ல என்று இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறித்து வினவிய போதே தயாசிறி ஜயசேகர இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாம் பிரிதொருவர் மீது விரல் நீட்டி குற்றம் சுமத்தும் போது ஏனைய விரல்கள் குற்றம் சுமத்துபவரை நோக்கியே காணப்படும். சுதந்திர கட்சி மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களும் இவ்வாறானவர்களே. 

பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய கிராம உத்தியோகத்தர் மட்டத்தில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களின்போது அவற்றில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்று பலரும் எம்மிடம் தெரிவித்துள்ளனர். 

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் அரசாங்கத்தின் வெற்றிக்காக சுதந்திர கட்சி பாடுபட்டிருக்கிறது. எனினும் தற்போது கீழ் மட்டத்திலுள்ள சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் இவ்வாறு புறக்கணிக்கப்படுவது அதிருப்தியளிக்கிறது.

இது குறித்து நாம் பல சந்தர்ப்பங்களில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம். உரியவர்களிடமும் தெரிவித்திருக்கின்றோம். எனவேதான் இது போன்ற அநாவசியமானதும் போலியானதுமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் நாம் அவ்வாறு செயற்படுவதில்லை. நாட்டின் அபிவிருத்திக்காகவும் மக்களுக்காகவும் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கும் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

No comments:

Post a Comment