ஆயிரம் ரூபா அதிகரிப்புக்கு பதிலாக மாற்றுத்திட்டம் ஒன்றை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது, அதனை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 9, 2020

ஆயிரம் ரூபா அதிகரிப்புக்கு பதிலாக மாற்றுத்திட்டம் ஒன்றை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது, அதனை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்புக்கு பதிலாக மாற்றுத்திட்டம் ஒன்றை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதனை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளமாக வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் நீதி மற்றும் தொழில் அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என வரவு செலவு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டு ஒரு மாத காலமாகும் நிலையில் இதுவரை அது தொடர்பில் பெருந்தோட்ட கம்பனிகள் எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லை. என்றாலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். 

ஆனால் கம்பனிகள் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை ஒன்றிணைத்து ஆயிரம் ரூபா வழங்கும் நடவடிக்கைக்கு இறங்கி இருப்பதாக தெரியவருகின்றது. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும் கூட்டு ஒப்பந்தங்கள் ஊடாக சம்பளம் அதிகரிக்கப்பட்டாலும் அதனை வழங்க முடியாது என்ற நிலைப்பாட்டுக்கு கம்பனிகளும் அரசாங்கமும் வந்திருப்பதாக எமக்கு அறிய கிடைக்கின்றது. சம்பள அதிகரிப்புக்கு பதிலாக மாற்றுத்திட்டமாக வெளிவாறி உற்பத்தி முறை ஒன்றை அவர்கள் முன்வைத்திருக்கின்றார்கள். அதனை நாங்கள் நிராகரிக்கின்றோம். இது சாத்தியமில்லாத விடயமாகும்.

அத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்பதுவே எமது கோரிக்கையாகும். அதேபோன்று பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொண்டுவரும் பெரும் பிரச்சினைதான் குளவி தாக்குதலாகும்.

குளவி தாக்குதலால் இதுவரை 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மரணித்துள்ளனர். இது தொடர்பாக பல தடவைகள் கம்பனிகளுக்கு தெரிவிக்கப்பட்டபோதும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. அதனால் தொழில் அமைச்சர் இது தொடர்பில் கவனம் செலுத்தி இதற்கு தீர்வொன்றை பெற்றுக் காெடுக்க வேண்டும்.

அத்துடன் தோட்டத்தில் தொழில் செய்யும் தொழிலாளர்கள் குறைந்து வருகின்றனர். இதற்கு பிரதான காரணமாக இருப்பது, நீண்ட காலமாக பெருந்தோட்டங்களில் தொழில் செய்துவரும் தொழிலாளர்கள் தொழில் நிரந்தரமாக்கப்படாமல் இருக்கின்றனர். 

ஓய்வு பெற்ற தொழிலாளர்களை உள்வாங்கி அவர்களுக்கு நாட் சம்பளம் மாத்திரம் வழங்கும் நடவடிக்கையை கம்பனிகள் மேற்கொண்டு வருகின்றன. அதனால் நீண்ட காலமாக தொழில் செய்துவருபவர்களை நிரந்தர தொழிலாளர்களாக்க வேண்டும்.

மேலும் தோட்டங்களில் இருந்து கொழும்பு போன்ற பிரதேசங்களுக்கு வந்து தொழில் செய்யும் தொழிலாளர்கள் தற்காலிக குடியிருப்புகளிலே வாழ்ந்து வருகின்றனர்.

அதனால் தற்போது கொரோனா பிரச்சினை காரணமாக அவர்கள் தொழில் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அவர்கள் தற்காலிக குடியிருப்புகளில் இருப்பதால் அரசாங்கத்தின் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதனால் இது தொடர்பாக தொழில் அமைச்சர் கவனம் செலுத்தவேண்டும் என்றார்

No comments:

Post a Comment