நெடுந்தீவிற்கான நெடுந்தாரகை பயணிகள் படகு சேவையை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 9, 2020

நெடுந்தீவிற்கான நெடுந்தாரகை பயணிகள் படகு சேவையை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

நெடுந்தீவிற்கான அரச பயணிகள் போக்கு வரத்து சேவைகள் தடைப்பட்டுள்ள நிலையில் நெடுந்தாரகை பயணிகள் படகின் போக்கு வரத்து சேவையை நாளை (10.12.2020) தொடக்கம் செயற்படுத்துவற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நெடுந்தாரகை படகினை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தேவையான எரிபொருளை வீதி போக்கு வரத்து அதிகார சபையின் ஊடாக பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் நாளை தொடக்கம் நெடுந்தாரகை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. 

நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையிலான பயணிகள் போக்கு வரத்தில் வடதாரகை, குமுதினி, மற்றும் நெடுந்தாரகை ஆகிய அரச படகுகள் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் வடதாரகை பயணிகள் படகு பழுதடைந்து திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

நெடுந்தீவு பிரதேச சபையினால் பராமரிக்கப்பட்டு வந்த நெடுந்தாரகை பயணிகள் படகு ஒரு தடவை குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவிற்கு சென்று வருவதற்கு சுமார் 110 லீற்றர் டீசல் தேவைப்பட்ட நிலையில் ஏற்பட்ட அதிக செலவீனம் காரணமாக குறித்த பிரதேச சபையினால் நெடுந்தாரகையின் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில், அண்மையில் ஏற்பட்ட புரெவி புயல் காரணமாக குமுதினி பயணிகள் படகும் பழுதடைந்துள்ள நிலையில் நெடுந்தீவிற்கான போக்கு வரத்துக்கள் முழுமையாக பாதிப்படைந்துள்ளன. 

குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு பிரதேச மக்களினால் கொண்டு வரப்பட்டதையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட கடற்றொழில் அமைச்சர் குமுதினி படகினை பழுது பார்த்து விரைவில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு அறிவுறுத்தியதுடன் நாளை தொடக்கம் நெடுந்தாரகை பயணிகள் படகினை சேவையில் ஈடுபடுத்துவத்தற்கும் அதற்கு தேவையான எரிபொருளை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கும நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment