(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
தேர்தல் முறையை மாற்ற முன்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதனையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் 20 ஆவது திருத்தம் ஏற்படுத்தப்பட்டதால் நாட்டில் பொறுப்புக்கூற தலைவர் ஒருவர் இருக்கின்றார் என தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் நீதி மற்றும் தொழில் அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் தற்போதைய தேர்தல் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு மேற்கொள்ளப்பட்டு அதனூடாக அதனை செய்ய வேண்டும். புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. அதனை அரசாங்கம் தற்போது ஆரம்பித்திருக்கின்றது.
கடந்த அரசாங்கத்தினால் அவசரப்பட்டு மேற்கொள்ளப்பட்ட 19ஆம் திருத்தமே பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாகும். நாட்டில் இடம்பெறக் கூடிய சம்பவங்களுக்கு யார் பொறுப்புக் கூறுவதென்று தெரியாது. ஏப்ரல் தாக்குதலுக்கு யார் பொறுப்பு கூறுவதென்று தெரியாமல் ஒருரை ஒருவர் குற்றம் சாட்டும் நிலையே இருந்து வருகின்றது.
அதனால்தான் 20ஆவது திருத்தத்தை கொண்டுவந்து, அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பொறுப்புக் கூறும் வகையில் அதிகாரங்களை ஜனாதிபதி தனக்கு கீழ் கொண்டுவந்திருக்கின்றார். இன்று பொறுப்புக்கூற தலைவர் ஒருவர் இருக்கின்றார்.
மேலும் இனவாதத்தை பிரசாரம் செய்தே அனைவரும் பாராளுமன்றத்துக்கு வருகின்றனர். ஏப்ரல் தாக்குதலை தேர்தலுக்கு பயன்படுத்தினார்கள். அதேபோன்று தற்போது கொராேனாவில் மரணிப்பவர்களை எரிப்பதையும் இனவாதமாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
கொராேனாவில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பதில் பிரச்சினை இருக்கின்றது. அந்த உரிமையை எங்களுக்கு தர வேண்டும் என நாங்கள் கேட்கின்றோம். ஆனால் சடலம் எரிப்பு தொடர்பாக ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் நீதிமன்றம் சென்றதும், தங்கள் வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்கே ஆகும்.
ஏனெனில் சட்டம் அமைப்பது பாராளுமன்றமாகும். அதனால் இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் கதைத்து சட்டத்தில் மாற்றங்களை செய்து கொள்ளலாம். அதனால்தான் நீதிமன்றமும் அந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலே தள்ளுபடி செய்திருக்கின்றது என்றார்.
No comments:
Post a Comment