இந்திய கப்பல்கள் துறைமுகங்களில் நிறுத்தம் - இரு தரப்பு உறவுநிலைக்கு தொடர்பில்லை என்கிறது சீனா - News View

About Us

About Us

Breaking

Saturday, December 26, 2020

இந்திய கப்பல்கள் துறைமுகங்களில் நிறுத்தம் - இரு தரப்பு உறவுநிலைக்கு தொடர்பில்லை என்கிறது சீனா

சீன துறைமுகங்களில் கப்பல்கள் அனுமதிக்கப்படாத சம்பவத்துக்கும், இந்தியாவுடனான சீனாவின் சமீபத்திய உறவுநிலைக்கும் தொடர்பில்லை என சீனா தெரிவித்துள்ளது

இந்தியாவைச் சேர்ந்த 2 சரக்குக் கப்பல்கள் சீனாவின் ஜிங்டாங், காபீடியான் துறைமுகங்களில் சரக்குகளை இறக்க அனுமதிக்கப்படாமல் பல மாதங்களாக தவித்து வருகின்றன. கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள அந்தக் கப்பல்களில் 39 ஊழியர்கள் உள்ளனர்.

இது குறித்து நேற்று முன்தினம் (24) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, ‘இந்த எதிர்பாராத நிகழ்வால் இரு கப்பல்களின் ஊழியர்களும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம், சீன அதிகாரிகளை தொடர்புகொண்டு, 2 கப்பல்களும் துறைமுகங்களில் சரக்குகளை இறக்கவும், பணிக்குழு மாற்றத்துக்கும் அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறது’ என்றார்.

இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் நேற்று (25) செய்தியாளர்களிடம் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘கொரோனா தொற்று காலத்தில் சீனாவில் கண்டிப்பான தனிமைப்படுத்தல் நிபந்தனைகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. 

அவற்றைப் பின்பற்றி, கப்பல் பணிக்குழுவை மாற்றுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் பணிக்குழு மாற்றத்துக்கு அனுமதிக்கும் துறைமுகங்கள் பட்டியலில் ஜிங்டாங் துறைமுகம் இல்லை. துறைமுகங்களில் கப்பல்கள் அனுமதிக்கப்படாத சம்பவத்துக்கும், இந்தியாவுடனான சீனாவின் சமீபத்திய உறவுநிலைக்கும் தொடர்பில்லை என தெரிவித்தார்.

மற்றொரு இந்திய கப்பல் அனுமதிக்கப்படாத காபீடியான் துறைமுகம் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

No comments:

Post a Comment