அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டிருந்தால் பெருமளவானோர் இன்று சிறைகளிலிலேயே இருந்திருப்பர் - பாதுகாப்பு செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 29, 2020

அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டிருந்தால் பெருமளவானோர் இன்று சிறைகளிலிலேயே இருந்திருப்பர் - பாதுகாப்பு செயலாளர்

(எம்.மனோசித்ரா)

குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர போன்றோர் எவ்வாறு தமது சேவையை ஆற்றினார்கள் என்பதை முழு நாடும் அறியும். தற்போதைய அரசாங்கத்தில் யாரும் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்படவில்லை. அவ்வாறு அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டிருந்தால் பெருமளவானோர் இன்று சிறைகளிலிலேயே இருந்திருப்பார்கள் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் ஜெனரல் நிலைக்கு தரமுயர்த்தப்பட்டதன் பின்னர் இன்று செவ்வாய்கிழமை தளதா மாளிகைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ஷானி அபேசேகர போன்றோர் எவ்வாறு தமது சேவையை ஆற்றினார்கள் என்பதை முழு நாடும் அறியும். நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் பழிவாங்கலுக்குச் செல்லவில்லை. 

நாம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டிருந்தோமானால் இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் சிறைகளிலேயே இருப்பார்கள். ஆனால் நாம் அவ்வாறு எதுவும் செய்யவில்லை. நிரூபிக்கப்பட்ட விடயங்களினாலேயே அவர்கள் சிறையிலுள்ளனர்.

தற்போதைய அரசாங்கம் இதற்கு முன்னர் அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்போது கொவிட் சடலங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கொவிட் சடலங்கள் தொடர்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது இன்றைய சூழலில் அபாயமானதாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சுகாதார தரப்பினரே தீர்மானங்களை எடுக்க வேண்டும். 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அண்மையில் வைரஸ் தொடர்பான நிபுணர்கள் குழுவை அமைத்து அதனை அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமையவே அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment