(நா.தனுஜா)
புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட அபிப்பிராயங்களுக்கு அமைவாகத் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொதுமக்கள் அபிப்பிராயங்களைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட குழுவிடம் பெப்ரல் அமைப்பு இன்றைய தினம் கையளித்துள்ளது.
மேற்படி பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையில் இது குறித்த தெளிவுபடுத்தலைச் செய்திருக்கும் பெப்ரல் அமைப்பு மேலும் கூறியிருப்பதாவது கடந்த 42 வருட காலத்தில் 20 தடவைகள் திருத்தம் செய்யப்பட்டிருக்கும் தற்போதைய அரசியலமைப்பிற்குப் பதிலாக, விரிவான மக்கள் அபிப்பிராயத்தைப் பெற்று மேலும் முன்னேற்றகரமான அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.
புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிக்கும் போது அதுகுறித்து மக்கள் மத்தியில் விரிவான ஆராய்வும் விவாதமும் ஏற்பட வேண்டும். எனினும் தற்போது அத்தகைய விவாதமொன்று இடம்பெறாமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
எனினும் போதியளவு கால அவகாசத்தில், பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்று, அனைத்து சமூகப் பிரிவினராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் தயாரிக்கப்படும் அரசியலமைப்பு மேலும் ஜனநாயகத் தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்பதே எமது நம்பிக்கையாகும்.
ஒரு அரசியலமைப்பு எந்தளவிற்கு மக்கள் அபிலாசைகளின் பிரதிபலிப்பாக அமைகின்றது என்பதைப் பொறுத்தே அதன் ஆயுட்காலம் தீர்மானிக்கப்படும்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கூட, புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடமும் இருந்து பெற்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு அதுகுறித்த பரிந்துரைகளைத் தயாரித்திருக்கின்றோம்.
குறிப்பாக தேர்தல் முறைமை தொடர்பிலும் மேலும் பல விடயங்கள் தொடர்பிலும் பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று பெப்ரல் அமைப்பு தெரிவித்திருக்கிறது.
அந்தப் பரிந்துரைகளில் அரசின் தன்மை, அடிப்படை உரிமைகள், மொழி, அரசாங்கத்தின் கொள்கையை செயற்படுத்தும் அடிப்படை, நிறைவேற்றதிகாரம், பாராளுமன்றம், வாக்குரிமை மற்றும் சர்வசன வாக்கெடுப்பு உள்ளடங்கலான தேர்தல், நீதிமன்றம், அதிகாரங்களைக் குவித்தல் மற்றும் அதிகாரப்பரவலாக்கல் உள்ளிட்ட விடயப்பரப்புக்களின் கீழ் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment