(நா.தனுஜா)
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் இயங்கும் கொவக்ஸ் நிறுவனத்திடமிருந்து தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்வதைத் தவிர்த்து விட்டு, அதனை ரஷ்யா அல்லது சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் இயங்கும் கொவக்ஸ் நிறுவனத்திடமிருந்து கொவிட்-19 தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்வதற்கு டிசம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு கோரப்பட்டிருந்த போதிலும், அரசாங்கம் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.
எனினும் தற்போது வறிய நாடு என்று அடையாளப்படுத்தப்பட்ட சுமார் 90 நாடுகளுக்கு தடுப்பு மருந்தை இலவசமாகப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. இவ்வாறான வாய்ப்புக்கள் காணப்பட்டாலும் கூட, சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் முற்படாமல் இருப்பதன் காரணமென்ன?
எம்மை விடவும் அதிக சனத் தொகை கொண்ட இந்தோனேசியா ஒரு தடுப்பு மருந்தை தலா 1.64 டொலர் அடிப்படையில் கொள்வனவு செய்வதற்குத் தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் தடுப்பு மருந்தை களஞ்சியப்படுத்துவதற்கான செலவுடன் சேர்த்து, இலங்கையின் சனத் தொகையான 20 மில்லியன் மக்களுக்குத் தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு 40 மில்லியன் டொலர் நிதியே செலவாகும்.
இந்நிலையில் கொவக்ஸ் நிறுவனத்திடமிருந்து தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்வதைத் தவிர்த்து விட்டு, அதனை ரஷ்யா அல்லது சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் உலக சுகாதார ஸ்தாபனம் போன்ற ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டமைப்பொன்றிடமிருந்தே தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அல்லாவிடின் அதுவும் 'தம்மிக பாணி' போன்றதாகவே அமையும்.
பிரென்டிக்ஸ் கொத்தணி ஏற்பட்டபோது, அந்த சிக்கலில் இருந்து அந்நிறுவனத்தை வெளிக்கொண்டு வருவதற்கு அரசாங்கம் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டது என்பதை நாம் நன்கறிவோம்.
பிரென்டிக்ஸ் நிறுவனத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை தொடர்பில் எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
குறிப்பாக தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,000 ஐக் கடந்திருக்கிறது. அதேபோன்று உலக சனத் தொகையில் குறைந்தபட்சம் 80 மில்லியன் பேருக்கு மாத்திரமே தொற்று ஏற்பட்டமைக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆகவே இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பற்ற விதத்திலேயே செயற்படுகின்றது. இது குறித்து எதிர்வரும் காலங்களில் மேலும் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்துவோம் என்றார்.
No comments:
Post a Comment