நேபாள பாராளுமன்றத்தை கலைக்கும் முடிவு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
நேபாள நாட்டின் பிரதமரும் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான கே.பி. சர்மா ஒலிக்கும் கட்சியின் நிர்வாகக் குழு தலைவரான புஷ்ப கமல் தஹால் பிரசந்தாவுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி காரணமாக கே.பி. சர்மா ஒலி பாராளுமன்றத்தை கலைக்க பரிந்துரைத்தார்.
அந்தப் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி பித்யா தேவி பந்தாரி பாராளுமன்றத்தைக் கலைத்தார். மேலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 30 மற்றும் மே 10 ஆகிய திகதிகளில் இரு கட்டங்களாக நேபாள பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பாராளுமன்றத்தை கலைக்கும் அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 10 க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த புதன்கிழமை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரானா இந்த மனுக்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றினார்.
இந்நிலையில், தலைமை நீதிபதி ரானா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியலமைப்பு அமர்வு முன்பு இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன.
அப்போது நீதிபதிகள், பாராளுமன்றத்தை கலைக்கும் முடிவு தொடர்பாக எழுத்துப்பூர்வ விளக்கத்தை சமர்ப்பிக்குமாறு கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
அனைத்து மனுக்களிலும் பிரதமர் அலுவலகம், அமைச்சரவை மற்றும் ஜனாதிபதி அலுவலகம் பிரதிவாதிகளாக இருப்பதால் அவர்கள் தங்களது எழுத்துப்பூர்வ விளக்கத்தை சமர்ப்பிக்க நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் பாராளுமன்றத்தை கலைக்க அரசு மேற்கொண்ட பரிந்துரையின் நகலையும், அரசின் பரிந்துரையை அங்கீகரிக்கும் ஜனாதிபதி பித்யா தேவி பந்தாரி அறிவிப்பின் நகலையும் 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்க நீதிமன்றம் கோரியுள்ளது.

No comments:
Post a Comment