முதிர்ச்சியடையாத மஞ்சளை அறுவடை செய்ய வேண்டாம் - ஏற்றுமதி விவசாயப் பணிப்பாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 8, 2020

முதிர்ச்சியடையாத மஞ்சளை அறுவடை செய்ய வேண்டாம் - ஏற்றுமதி விவசாயப் பணிப்பாளர்

முதிர்ச்சியடையாத மஞ்சளை அறுவடை செய்வதைத் தவிர்க்குமாறு ஏற்றுமதி விவசாயப் பணிப்பாளர் உபுல் ரணவீர கேட்டுக் கொண்டுள்ளார்.

மஞ்சள் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் நன்கு முதிர்ந்த நிலையை அடையும் முன் மஞ்சள் அறுவடை செய்வதால் அடுத்த போகத்தில் நாட்டில் விதை மஞ்சள் கிழங்குகளுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஏற்றுமதி விவசாயப் பணிப்பாளர் (அபிவிருத்தி) உபுல் ரணவீர மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் நாட்டில் தற்போது மஞ்சளுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன் மஞ்சள் விலை அதிகரித்து வருகிறது, விவசாயிகள் தங்களது மஞ்சள் உற்பத்திகளை அவசரப்பட்டு உரிய காலம் வரும் முன் அல்லது நன்கு முதிர்வடைய முன் அறுவடை செய்ய முயற்சிக்கின்றனர். அவ்வாறு செய்வது விவசாய சமூகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த நாட்டிற்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தும். 

தற்போது சுமார் 370 ஹெக்டேயரில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உற்பத்திகளும், சுமார் 1000 ஹெக்டேயரில் வீட்டுத் தோட்ட உற்பத்திகளும் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனூடாக சுமார் 25,000 மெட்ரிக் தொன் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது. இதில், சுமார் 5,000 மெட்ரிக் தொன் அடுத்த வருட (2021) உற்பத்திக்கு பயன்படுத்தப்பட வேண்டும். இதுபோன்ற முறையில் பயிரிட முடிந்தால், நாட்டின் உள்ளூர் மஞ்சள் தேவையை 2022 ஆம் ஆண்டிற்குள் பூர்த்தி செய்ய முடியும்.

1 கிலோ உலர் மஞ்சள் தூள் தயாரிக்க, சுமார் 6 முதல் 7 கிலோ முதிர்ந்த மஞ்சள் தேவைப்படுகிறது. இருப்பினும், முதிர்ச்சியடையாத மஞ்சள் தூள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டால் அதன் அளவு இன்னும் அதிகரிக்கும். சுமார் 10 - 12 கிலோ மஞ்சள் அதற்காகக் தேவைப்படுகிறது. இது உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் பாதகமாக அமையும். 

இவ்வாறு அறுவடை செய்யப்படும் மஞ்சள் அறுவடையின் தரமும் குறைந்தபட்சமாகவே இருக்கும். எனவே, முதிர்ச்சியடையாத மஞ்சளை அறுவடை செய்வதைத் தவிர்க்குமாறு மஞ்சள் விவசாயிகளை பணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.

(எம்.ஏ.அமீனுல்லா)

No comments:

Post a Comment