கொரோனா சட்டம் அமைச்சர்களுக்கு ஒரு விதமாகவும் சாதாரண பொதுமக்களுக்கு ஒரு விதமாகவும் நடைமுறைபடுத்தப்படுகின்றது - இராதாகிருஸ்ணன் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 24, 2020

கொரோனா சட்டம் அமைச்சர்களுக்கு ஒரு விதமாகவும் சாதாரண பொதுமக்களுக்கு ஒரு விதமாகவும் நடைமுறைபடுத்தப்படுகின்றது - இராதாகிருஸ்ணன்

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதியின் கோட்பாடு வெறும் வார்த்தைகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அது நடைமுறையில் இல்லை. கொரோனா சட்டம் அமைச்சர்களுக்கு ஒரு விதமாகவும் சாதாரண பொதுமக்களுக்கு ஒரு விதமாகவும் நடைமுறைபடுத்தப்படுகின்றது. ஆனால் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு அனைவருக்கும் சட்டம் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதே என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று (24) நுவரெலியா மலையக மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்ற தோட்ட தலைவர்களுடனான கலந்துரையாடலின் பொழுதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணமே உள்ளது.அதற்கு காரணம் சுகாதார அதிகாரிகளின் அசமந்த போக்கே. கொரோனா சட்டங்களுக்கு அமைய திருமண வீட்டில் 50 பேர் மரண வீட்டில் 25 பேர் ஆலயங்களில் 10 பேர் மாத்திரமே பங்குபற்ற முடியும் என சட்டம் இருக்கின்றது.

ஆனால் இன்று அந்த சட்டம் நுவரெலியா மாவட்டத்தில் பொது மக்களுக்கு மாத்திரமே நடைமுறையில் இருக்கின்றது.அந்த சட்டங்கள் அமைச்சர்களுக்கும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இல்லை.

அமைச்சர்களும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கின்ற நிகழ்வுகளில் 300 அதிகமானவர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றார்கள். அதற்கு சுகாதார பிரிவினரோ அல்லது பாதுகாப்பு தரப்பினரோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக அதற்கு பாதுகாப்பு வழங்குகின்றார்கள். 

ஆனால் சாதாரண ஒரு பொது மகன் இதனை செய்தால் சட்டம் சுகாதார அதிகாரிகளின் நடவடிக்கை மிகவும் வித்தியாசமாக இருக்கின்றது. இதுதான் ஜனாதிபதியின் ஒரே நாடு ஒரே சட்டமா? என்ற கேள்வி எழுகின்றது.இந்த விடயத்தில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அது மட்டுமல்லாமல் நுவரெலியா மாவட்டத்தில் ஒரு சில சுகாதார அதிகாரிகளின் அசமந்த போக்கும் இந்த மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கின்றார்கள்.

பி.சி.ஆர் பரிசோதனையின் பின்பு பெறுபேறுகள் வருவதற்கு 3 நாட்கள் ஆகின்றது. இந்த நாட்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுவதில்லை. அவர்கள் வெளியில் நடமாடுகின்றார்கள் இதனால் தொற்றாளர்கள் அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக இது அமைந்துவிடுகின்றது.

இது தொடர்டபாக சுகாதார அதிகாரிகள் காவல் துறை பொது சுகாதார பரிசோதகர்கள் இடையில் முறையான தொடர்பாடல் இல்லை. இது ஒரு முக்கிய காரணமாகும்.எனவே இவ்வாறான விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களை முறையாக தொடர்ந்து அவதானிக்க வேண்டும்.இது சரியாக இல்லாமையின் காரணமாகவே தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச சபை தலைவர் ஒருவர் வெளியில் நடமாடியதன் காரணமாக இன்று பலரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

எனவே அமைச்சர்களுக்கும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விசேட சலுகைகளை அரசாங்கம் வழங்காமல் அனைவருக்கும் பொதுவாக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.அப்படி செய்தால் மாத்திரமே ஜனாதிபதியின் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற இலக்கை நோக்கி பயணிக்க முடியும்.

மலையக நிருபர் தியாகு

No comments:

Post a Comment