வரலாற்றில் முதல் தடவையாக ஹல்துமுல்ல பிரதேச சபைக்கு தமிழர் தவிசாளராகத் தெரிவு - News View

About Us

About Us

Breaking

Thursday, December 24, 2020

வரலாற்றில் முதல் தடவையாக ஹல்துமுல்ல பிரதேச சபைக்கு தமிழர் தவிசாளராகத் தெரிவு

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சிங்கமுத்து அசோக்குமார், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் மற்றும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவருமான செந்தில் தொண்டமான் முன்னிலையில்,நேற்று (23.12.2020) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

வரலாற்றில் முதல் தடவையாக, ஹல்துமுல்ல பிரதேச சபைக்கு, தமிழர் ஒருவர் தவிசாளராகத் தெரிவாவது, இதுவே முதற்தடவையாகும்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், ஹப்புத்தளை பிரதேச சபையின் தவிசாளராகத் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு, செந்தில் தொண்டமானின் அரசியல் தலைமைத்துவச் செயற்பாடுகளே காரணமாகியிருந்த நிலையில், அதேபோன்றதோர் அரசியல் தலைமைத்துவச் செயற்பாடே, ஹல்துமுல்ல பிரதேச சபையிலும் தமிழர் ஒருவர் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளமைக்குக் காரணமாகியுள்ளது. இது, ஊவா மாகாணத் தமிழர் அரசியலில், முக்கியமானதோர் திருப்புமுனையாகவே பார்க்கப்படுகின்றது.

412 சதுர கிலோமீற்றர் பரப்பரளவைக் கொண்ட ஹல்துமுல்ல பிரதேசம், 40,216 பேரைக் கொண்ட பதுளை மாவட்டத்தில், சுமார் 80 சதவீத பெரும்பான்மை இனத்தவர்களைக் கொண்டுள்ள நிலையில், தமிழர் ஒருவர் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை, அரசியல் ரீதியில் வென்றெடுக்கப்பட்ட உரிமையாகும்.

பதுளை மாவட்டத்தில் பல காலங்களாக பல்வேறு அரசியல் பிரதிநிதிகள் இருந்துவந்தாலும், இன்று தமிழர்களை உயர் பதவிகளில் அமரவைத்துள்ளமையானது, செந்தில் தொண்டமான் , ஊவா மாகாணத்தில் பலம்வாய்ந்த அரசியல் சக்தியாகத் திகழ்வதைப் பரைசாற்றியுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஊவா மாகாணத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அதிகமான தமிழ் வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும், அம்மாகாணத்துக்கான கட்சியின் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது போனது. இருப்பினும், அம்மாகாணத்தின் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்கும் மிகப்பெரிய சக்தியாக செந்தில் தொண்டமான் திகழ்கின்றார் என்பதை, அசோக்குமார் உள்ளிட்டவர்களின் தெரிவுகள் புலப்படுத்தியுள்ளன.

இவ்வாறான அரசியல் சக்தி காரணமாகவே, பெரும்பான்மையினர் அதிகளவில் வாழும் ஊவா மாகாணத்தில், தமிழர்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதேச மட்டத்திலான அரசியல் மற்றும் நிர்வாகப் பொறிமுறையில், பிரதேச சபைகளே முக்கியத்துவம் பெறுகின்றன. அவ்வாறானதொரு கட்டமைப்பில், தமிழர்கள் தவிசாளர் பதவிகளை வகிப்பதென்பது, ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் கிடைக்கும் கௌரவமாகவே கருதப்படுகிறது.

அரசியல் ரீதியான தேசியமட்ட முடிவுகள் வெற்றி பெறுவதற்கு, பிரதேச சபைகளின் பங்களிப்பு மிக அவசியமாகின்ற நிலையில், அத்தகைய சபைகளில் உரிமைகளை வென்றெடுத்து உள்ளமையானது, செந்தில் தொண்டமானின் அரசியல் பலத்தை எடுத்தியம்பியுள்ளது.

1989ஆம் ஆண்டு முதல், இம்மாகாணத்தில் தமிழர் நியமனங்கள் அற்றிருந்த நிலையில், இரு தவிசாளர்களின் நியமனங்கள், ஊவா மாகாணத் தமிழர் அரசியலின் பெரும் சாதனையாகவே கருதப்படுகிறது.

No comments:

Post a Comment