புரெவி இயற்கை அனர்த்தத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள வட பகுதி மக்களுக்கு விஷேட இழப்பீடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸ இணக்கம் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஒரு வார காலமாக புரெவி புயலின் தாக்கத்தால் வட பகுதி குறிப்பாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல மில்லியன் சொத்திழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதி மக்களின் நிலைமைகளை கருத்திற்கொண்டு அவர்களுக்கான உரிய இழப்பிடுகளை வழங்க வேண்டும் என நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன்போது அமைச்ர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பாதிப்புகள் தொடர்பில் முழுமையான மதிப்பீடுகள் கிடைக்கப் பெற்றதும் அதற்கான இழப்பீடுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
புரெவி அனர்த்தத்தால் பேரழிவுகளை சந்தித்துள்ள நெடுந்தீவு உள்ளிட்ட தீவக கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புகளுக்கு நிவாரணங்களை பெற்றுத்தருமாறு குறித்த பிரதேசங்களின் கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அமைச்சர் இவ்வாறு தேரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் புரெவி அனர்த்தம் காரணமாக வட மாகாணம் பெரும் பாதிப்புக்களை சந்தித்துள்ளது.
குறிப்பாக யாழ் மாவட்டம் கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகியன கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ளன. இதனால் இப்பகுதியில் வாழும் ஒரு இலட்சத்தக்கும் அதிகமான மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது.
அத்துடன் நாளாந்த தொழில் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக கடற்றொழிலாளர்கள் இந்த புரவி தாக்கத்தால் பெரும் பொருளாதார இழப்புக்களையும் எதிர்கொண்டுள்ளனர்.
குறிப்பாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள தீவக கடற்றொழிலாளர்கள் மட்டுமல்லாது மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களின் மக்களும் சந்தித்துள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடுகள் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள அனைவரது தரவுகளையும் மாவட்ட செயலகங்களில் தாம் கோரியுள்ளதாகவும் மாவட்ட செயலகங்களால் திரட்டப்பட்டுவரும் விபரங்கள் கிடைத்ததும் அவர்களுக்கான இழப்பீடுகள் விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment