பொது மையவாடிக் காணியின் உண்மைத் தன்மை என்ன? - ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளிவாயல் அறிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 15, 2020

பொது மையவாடிக் காணியின் உண்மைத் தன்மை என்ன? - ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளிவாயல் அறிக்கை

அண்மைய தினங்களாக கொரோனாவினால் மரணிக்கும் ஜனாஷாக்களை அடக்கம் செய்ய ஓட்டமாவடி - மஜ்மா நகர் பொது மயானக் காணியை பயன்படுத்துதல் தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், பொது மையவாடிக் காணியின் உண்மைத் தன்மை தொடர்பில் ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளிவாயல் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மிக நெடுங்காலமாகவே ஓட்டமாவடி முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளிவாயலானது எமது பிரதேச ஜனாஸாக்களை முறையாக நல்லடக்கம் செய்வதற்கான நிலத்தைப் பெற்றிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

பிரதேச மக்கள் தொகை அதிகரித்து வருவதால் நெடுங்காலமாக பயன்படுத்தப்படும் மையவாடியில் அதிகரித்து வரும் மக்கள் தொகை நிலப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. 

செம்மண்ணோடை, மாவடிச்சேனை, பிறைந்துறைச்சேனை உள்ளிட்ட பிரதேசங்களும் கூட தனியான மையவாடி இல்லாத நிலையில், இப்பள்ளிவாயலின் மையவாடியையே பயன்படுத்த வேண்டியுள்ளது. 

மழைக் காலங்களில் கப்று தோண்ட முடியாத நிலைகளும், தற்போது கப்று தோண்டும் போதெல்லாம் பழைய ஜனாஸாக்களினதும், உடற்பாகங்களினதும் வெளிப்பாடும் என தொடர்ந்தும் பள்ளிவாயல் மையவாடியானது பாரிய நில நெருக்கடியை எதிர்நோக்கி வருவதை எமக்குத் தெளிவுபடுத்துகிறது. 

மேலும், ஓட்டமாவடி பிரதேச நிலத்தடி நீர் குடிநீருக்கு உகப்பற்றது என்பதாக சுகாதார அறிக்கைகள் தெளிவுபடுத்தியுள்ளன. 

தொற்றா நோய்களின் பரவலும் பேசு பொருளாக உள்ளது. ஊரின் மத்தியில் அமைந்துள்ள மையவாடியின் தாக்கமும் இதில் இருக்குமோ என்கிற ஐயமும் பரவலாக பேசு பொருளான நிலையில், ஊருக்கு வெளிப்புறமாக ஒரு பொது மையவாடியின் அத்தியாவசியம் மிகவும் உணரப்பட்டது.

இதேநிலையையே கல்குடா பிரதேச அனைத்து பள்ளிவாயல் மையவாடிகளும் எதிர்நோக்கி இருந்த நிலையில்தான் ஓட்டமாவடி முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளிவாயலின் தலைமையில் அனைத்து பள்ளிவாயல்களின் நிர்வாகம், மஜ்மா கிராம அபிவிருத்திச் சங்கமும், ஜனாஸா நலன் மற்றும் சமூக சேவைகள் அமைப்பு, பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்துடன் இணைந்து கருமமாற்றியதன் பயனாகவே ஒரு பொது மையவாடிக்கான அரச அனுமதியைப் பெற முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

இப்பின்புலத்திலேயே ஓட்டமாவடி முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் 2017.06.22 அன்று ஒரு பொது மையவாடியைப் பெற்றுத்தரும் கோரிக்கையை ஓட்டமாவடி பிரதேச சபைக்குச் சமர்ப்பித்திருந்தனர். 

குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரதேச சபை, பொது மையவாடிக்கான 15 ஏக்கர் காணியை பாராதீனப்படுத்தும் அனுமதி கோரி பிரதேச செயலகத்துக்கு கோரிக்கை வைத்தது. 

அடையாளப்படுத்தப்பட்ட குறித்த அரச காணியானது, ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயல் நிர்வாகத்தினரும் பங்கேற்று நில அளவை மேற்கொள்ளப்பட்டது.

பிரதேச சபையின் கோரிக்கையைப் பெற்ற பிரதேச செயலகம் மாவட்ட செயலகத்திற்கு தனது கோரிக்கையை முன்வைத்தது. மாவட்ட செயலக காணிப் பயன்பாட்டுக் குழுவின் சிபாரிசின் மூலம் பொது மையவாடிக்கான 10 ஏக்கர் காணியை பாராதீனப்படுத்தும் அனுமதி 2018.06.26 அன்று வழங்கப்பட்டது.

இக்காணியே தற்போது ஓட்டமாவடி முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளிவாயலின் பராமரிப்பின் கீழ் தயார்படுத்தப்படும் மஜ்மா கிராமத்தில் அமைந்துள்ள எமது ‌பிரதேசத்தின் எதிர்கால பொது மையவாடியாகும். 

கொரோனா தொற்றும் ஜனாஸா எரிப்பும் மிகப் பெரும் உணர்வலைகளை நாடாளாவிய ரீதியில் முஸ்லிம்கள் மத்தியில் தோற்றுவித்த நிலையில், தக்க பாதுகாப்புடன் கொரோனா தொற்றுக்குள்ளான ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் விதப்புரைக்கு அமைவாக கலந்துரையாடல்கள் நிகழ்த்தப்பட்டு வந்தவேளை, குறித்த ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய பொருத்தமான இடங்கள் தொடர்பிலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிடம் அரசால் கோரப்பட்டிருந்தது. 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஓட்டமாவடி முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளிவாயல் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு குறித்த எமது எதிர்கால தேவைக்கான மையவாடியின் ஒரு பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஜனாஸாக்களை அடக்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய அனுமதியையும் கேட்டிருந்தது. 

இதைத் தொடர்ந்து ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் பிரதேச சபைத் தவிசாளரின் தலைமையில் ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயல் தலைவர் மற்றும் நிருவாக உறுப்பினர்கள், ஏனைய பள்ளிவாயல் நிருவாகிகள், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் பின், இக்கட்டான இச்சூழ்நிலையில் எம் சமூகத்தின் நலன்கருதி அரசு ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் உரிமையைத் தருமாயின், அதை அடக்குவதற்காக எமது ‌மையவாடியையும் உரிய சுகாதார நடைமுறைகளுடன் பயன்படுத்திக் கொள்ள தமது விருப்பத்தையும் ஓட்டமாவடி முஹ்யித்தீன் ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தினர் 12/11/2020ம் திகதி அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிடம் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த தகவல்களை அன்றையதினமே ஊடகங்களில் அறிக்கையிடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. 

காரணம், நல்லடக்கம் செய்வதற்கான அனுமதி அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டால் மாத்திரமே இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், இதனைப் பூதாகரமாக்கி இந்த விடயத்தைப் பொது வெளியில் பகிர்வதன் மூலம் எமது முயற்சிக்கு தடை ஏற்படலாம் என்ற கருத்தாடல் வலியுறுத்தப்பட்டது.

இதுவே எமது பொது மையவாடி தொடர்பிலான உண்மைத் தன்மையான விபரங்களாகும். இதில் தனி நபர் நல அரசியல்களை விடுத்து, அதனால் எதிர்காலத்தில் ஏற்படத்தக்க வீண் சிக்கல்களையும் தவிர்த்துக் கொள்வோமாக என குறிப்பிடப்பட்டுள்ளது.

Thehotlinelk

No comments:

Post a Comment