தரிசு நிலங்களில் விவசாயம் செய்ய தோட்ட தொழிலாளருக்கு அனுமதி, ஆனால் உரித்து வழங்கப்படமாட்டாது என்கிறார் மஹிந்தானந்த - News View

About Us

About Us

Breaking

Thursday, December 3, 2020

தரிசு நிலங்களில் விவசாயம் செய்ய தோட்ட தொழிலாளருக்கு அனுமதி, ஆனால் உரித்து வழங்கப்படமாட்டாது என்கிறார் மஹிந்தானந்த

பெருந்தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்களின் உரித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாது. தரிசு நிலங்களில் விவசாயம் செய்வதற்கான அனுமதி மாத்திரமே வழங்கப்படுமென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வேலுகுமார் எம்.பி தமது கேள்வியில், பெருந்தோட்டத் தொழிலாளர்களை லயன் யுகத்திலிருந்து விடுவிப்பதற்காக அவர்களுக்கு 07 பேர்ச் வீதம் காணி வழங்கி தனி வீடு அமைக்கும் திட்டம் எமது ஆட்சியின்போது முன்னெடுக்கப்பட்டது. 

முதற்கட்டமாக 07 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களில் 02 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிவடைந்துள்ளது. 

10 பேர்ச் காணி வழங்கப்படும் என்றனர். ஆனால் இன்னும் அது வழங்கப்படவில்லை. எனவே, இத் திட்டம் எப்போது ஆரம்பமாகும்? எப்போது நிறைவடையும்? என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.

கடந்த எந்தவொரு ஆட்சியின்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சட்டபூர்வமாக காணி உரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நல்லாட்சியின் போதுதான் லக்ஷ்மன் கிரியல்ல பெருந்தோட்டத்துறை அமைச்சராக இருக்கையில அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டு சட்டபூர்வமாக அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பெருந்தோட்டப் பகுதியிலுள்ள தரிசு நிலங்களை, தோட்டத் தொழிலாளர்களுக்கு உற்பத்தி நடவடிக்கைகளுக்காக தலா 02 ஏக்கர் வீதம் பகிர்ந்தளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அத்திட்டம் தொடருமா? என்றார். 

இந்தக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் அமைப்பதற்கான காணி உரிமை வழங்கப்படும். அவ்வாறான இடங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு வருகின்றன. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின்போதுதான் தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

நல்லாட்சியின் கொள்கைத் திட்டங்களை எமது ஆட்சியில் முன்னெடுக்க முடியாது. பெருந்தோட்டப் பகுதியில் உள்ள தரிசு நிலங்கள் விவசாயம் செய்வதற்கு வழங்கப்படும். ஆனால் அதன் உரித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாது என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment