கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறித்து ஆராய இரு குழுக்கள் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 24, 2020

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறித்து ஆராய இரு குழுக்கள் நியமனம்

(எம்.மனோசித்ரா)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சரவையால் இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அந்த குழுக்களின் அறிக்கைகள் கிடைத்த பின்னரே இது குறித்து அரசாங்கத்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று துறைமுக அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாடுகளுக்கு விற்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை. துறைமுக அதிகாரசபையால் இந்த கிழக்கு முனையம் உருவாக்கப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தினால் இதனை இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் புரிந்துணர்வு உடன்கடிக்கையை மேற்கொண்டு அவர்களுடன் இணைந்து இதன் செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை இதனை விற்பதல்ல. இது தொடர்பான நடவடிக்கைகளுக்கு அமைச்சரவையால் இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 

அவற்றில் ஒன்று இதன் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும். மற்றைய குழு இந்தியா உள்ளிட்ட ஏனைய முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இதற்கான சிறந்த தீர்மானம் என்ன என்பதை அறிவிக்கும். இந்த குழுக்களின் அறிக்கைகள் கிடைத்த பின்னரே அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்கும் என்றார்.

No comments:

Post a Comment