முஸ்லிம்களின் ஜனாசாக்களை புதைப்பதற்கு இலங்கை மாத்திரமே தடை விதித்துள்ளது, விமான நிலையத்தை திறந்தாலும் யாரும் நாட்டுக்கு வரப்போவதில்லை ராஜித சேனாரத்ன - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

முஸ்லிம்களின் ஜனாசாக்களை புதைப்பதற்கு இலங்கை மாத்திரமே தடை விதித்துள்ளது, விமான நிலையத்தை திறந்தாலும் யாரும் நாட்டுக்கு வரப்போவதில்லை ராஜித சேனாரத்ன

(எம்.மனோசித்ரா) 

உலகில் 188 நாடுகளில் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள போதிலும் அவற்றில் இலங்கை தவிர்ந்த ஏனைய அனைத்து நாடுகளும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை புதைப்பதற்கு அனுமதியளித்துள்ளன. புதைப்பதால் வைரஸ் மீண்டும் பரவும் என பொய் கூறி மக்களை இந்த அரசாங்கம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அத்தோடு தற்போது விமான நிலையத்தை திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும் அமெரிக்காவிலுள்ள கொவிட் கட்டுப்படுத்தல் மற்றும் நிவாரணம் தொடர்பான அமைப்பினால் இலங்கை தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கையை மீறி யாரும் நாட்டுக்கு வரப் போவதில்லை என்றும் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், அமெரிக்காவிலுள்ள கொவிட் கட்டுப்படுத்தல் மற்றும் நிவாரணம் தொடர்பான அமைப்பொன்றினால் இலங்கை அபாயமுடைய நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த அமைப்பினால் கொவிட் தொடர்பில் 4 கட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய முதலாவது கட்டம் குறைந்த அல்லது தொற்றாளர்கள் அற்றதும், இரண்டாவது கட்டம் மத்தியத்திரமாக தொற்றாளர்கள் அடையாளங் காணப்படுவதும், மூன்றாவது அதிக தொற்றாளர்கள், நான்காவது மிக அதிக தொற்றாளர்கள் என்பது அந்த 4 கட்டங்களாகும்.

அதற்கமைய இலங்கை 4 ஆவது கட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கைக்கு எந்தவொரு நாட்டிலிருந்தும் சுற்றுலா செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் முழு நாட்டிலும் கொவிட் பரவியுள்ளது என்பதை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் கூறியுள்ளார்.

ஆரம்பத்திலேயே வைரஸ் பரவல் முறையாக கட்டுப்படுத்தப்படாமையின் விளைவே இதுவாகும். தற்போது கொவிட் ஒழிப்பிற்கானது எனக் கூறி பல பானங்கள் வெளி வருகின்றன. அமைச்சர்கள் இவை தொடர்பில் பிரசாரங்களை முன்னெடுத்தாலும் தேசிய ஆய்வுகூடம், அரச ஆயுர்வேத மருத்துவ சங்கம் என்பன இவற்றை பாவிக்க வேண்டாம் என்று கூறுகின்றன.

ஆயுர்வேத மற்றும் தேசிய மருந்துகள் தொடர்பில் ஆராய்வதற்கு நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அந்த மருந்துகளின் மாதிரிகள் இதுவரையில் அந்த குழுவிற்கு கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் புதிய மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டாலும் அவற்றை முதலில் பிராணிகளுக்கு கொடுத்தே சோதிப்பார்கள். ஆனால் எமது நாட்டில் சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் மூலம் சோதிக்கப்படுகிறது. இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள பதிவு செய்யப்படாத எவிகன் என்ற மருந்தை நாட்டுக்கு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் உள்நாட்டு சுகாதாரத்துறை பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது.

உலகில் 188 நாடுகளில் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள போதிலும் அவற்றில் இலங்கை தவிர்ந்த ஏனைய அனைத்து நாடுகளும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை புதைப்பதற்கு அனுமதியளித்துள்ளன. புதைப்பதால் வைரஸ் மீண்டும் பரவும் என பொய் கூறி மக்களை இந்த அரசாங்கம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. 

தற்போது முஸ்லிம்கள் அச்சமடைந்துள்ளன. பிரித்தானிய பாராளுமன்றத்தில் கூட இலங்கையின் இந்த செயற்பாடு பற்றி பேசப்படுகிறது. சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கிறது. மீண்டும் கொடுங்கோல் ஆட்சியை நோக்கியே இலங்கை சென்று கொண்டிருக்கிறது.

இவர்கள் விமான நிலையத்தை திறக்க முயற்சித்தாலும், இலங்கை தொடர்பில் அமெரிக்க அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள பயண எச்சரிக்கைக்கு அப்பால் யாரும் நாட்டுக்கு வரப்போவதில்லை என்றார்.

No comments:

Post a Comment