மீன்பிடி தொடர்பான இலங்கை - இந்திய செயற்பாட்டுக் குழுவின் 4 ஆவது இணைய வழி மாநாடு - இரு நாடுகளுக்கும் பொதுவான பிரச்சினைகள் குறித்து ஆராய்வு - News View

About Us

About Us

Breaking

Thursday, December 31, 2020

மீன்பிடி தொடர்பான இலங்கை - இந்திய செயற்பாட்டுக் குழுவின் 4 ஆவது இணைய வழி மாநாடு - இரு நாடுகளுக்கும் பொதுவான பிரச்சினைகள் குறித்து ஆராய்வு

(நா.தனுஜா)

மீன்பிடி தொடர்பான இலங்கை - இந்திய செயற்பாட்டுக் குழுவின் 4 ஆவது இணைய வழி மாநாடு நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் பொதுவான மீன்பிடித்துறைசார் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது.

இதில் இலங்கை சார்பில் மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.ஐ.ரத்நாயக்க தலைமையிலான குழுவும் இந்தியாவின் சார்பில் மீன்பிடித்துறை அமைச்சின் கீழான மீன்பிடி திணைக்களத்தின் செயலாளர் கலாநிதி ரஜீவ் ரஞ்சன் தலைமையிலான குழுவும் கலந்துகொண்டது.

இந்த மாநாட்டில் இரு நாடுகளுக்கும் பொதுவான மீன்பிடித்துறைசார் பிரச்சினைகள் தொடர்பில் விசேடமாகக் கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக இலங்கையின் கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் சட்டரீதியான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை உறுதிசெய்வது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று இலங்கை பிரதிநிதிகள் வலியுறுத்தினர். 

சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளினால் இலங்கை மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களும் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்விடயத்தில் தமது தரப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் விளக்கமளித்தனர்.

அத்தோடு இது விடயத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் முறையான செயற்திட்டமொன்றை உருவாக்கிக் கொள்வதன் ஊடாகவே சிறந்த பெறுபேறைப் பெறமுடியும் என்றும் இரு நாட்டின் பிரதிநிதிகளும் குறிப்பிட்டனர்.

அதேவேளை இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் விடுதலையை விரைவுபடுத்துமாறும் இந்தியாவின் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர். 

அதற்குப் பதிலளித்த இலங்கை பிரதிநிதிகள், சட்டத்தின் பிரகாரம் உரிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment