இஸ்ரேலில் இரண்டு ஆண்டுகளில் 4 ஆவது தேர்தலுக்கு செல்லும் வாய்ப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, December 3, 2020

இஸ்ரேலில் இரண்டு ஆண்டுகளில் 4 ஆவது தேர்தலுக்கு செல்லும் வாய்ப்பு

இஸ்ரேல் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் ஆளும் கூட்டணியில் உள்ள பென்னி காட்ஸ் அறிவித்துள்ளார். 

இது இஸ்ரேலியில் இரண்டு ஆண்டுகளுக்குள் நான்காவது தேர்தலுக்கு இட்டுச் செல்ல வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

நெதன்யாகுயின் வலதுசாரி லிகுட் கட்சி தலைமையிலான ஸ்திரமற்ற ஆளும் கூட்டணியில் பென்னி காட்ஸின் நீலம் மற்றும் வெள்ளை கட்சி தீர்க்கமான அங்கம் வகிக்கிறது.

நெதன்யாகு மற்றும் காட்ஸுக்கு இடையே கடும் போட்டி நீடித்த மூன்று பொதுத் தேர்தல்களிலும் ஒருவராலும் ஆட்சி அமைக்க முடியாத நிலையிலேயே இந்த கூட்டணி அரசு அமைக்கப்பட்டது.

இருவருக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய 2021 நவம்பர் மாதத்தில் காட்ஸ் பிரதமராக பதவி ஏற்கவுள்ளார். எனினும் அதற்கு முன்னர் நெதன்யாகு இந்தக் கூட்டணியை குழப்ப முயற்சிப்பார் என்று அவரது எதிர்ப்பாளர்கள் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் வரவு செலவுத் திட்ட பரிந்துரைக்கு நெதன்யாகு ஆதரவு அளிக்காததன் மூலம் அவர் மற்றொரு தேர்தலை விரும்புவது தெளிவாகத் தெரிகிறது என்று முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது பாதுகாப்பு அமைச்சராகவும் உள்ள காட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் எதிர்க்கட்சி ஆதரவுடனான பிரேரணை நேற்று கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிராக வாக்களிக்கும்படி வலியுறுத்தி நெதன்யாகு வீடியோ பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment