நேற்று வீசிய புரெவி சூறாவளியினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 3,575 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அரசாங்க தகவல் தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் புரெவி சூறாவளியின் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் 3,575 குடும்பங்களுக்கு உட்பட்ட 12,252 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக வடக்கு மாகாணத்தில் மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் 3,554 குடும்பங்களுக்கு உட்பட்ட 12,252 பேரும், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்திற்கு உட்பட்ட 21 குடும்பங்களை சேர்ந்த 91 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புரெவி சூறாவளி காரணமாக யாழ் மாவட்டத்தில் பருத்தித்துறை பிரதேசத்தில் 04 பேர் காயமடைந்துள்ளனர். சுன்னாகம் பிரதேசத்தில் ஒருவர் காணாமல் போய்யுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் 06 வீடுகளும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 152 வீடுகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 09 வீடுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு வீடும், வவுனியா மாவட்டத்தில் 05 வீடுகளுமாக வட மாகாணத்தில் 173 வீடுகளுக்கு ஓரளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்தோடு யாழ் மாவட்டத்தில் 15 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள 19 வீடுகள் ஓரளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதுடன், புரெவி சூறாவளியின் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓரளவுக்கு பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 192 ஆகும்.
இதற்கு மேலதிகமாக வடக்கு மாகாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான 09 வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக நிவாரன நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மன்னார் மாவட்டதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் திருமதி ஸ்டேன்லி டிமெல் தெரிவித்துள்ளார்.
கடுங் காற்றுக் காரணமாக வடக்குக் கிழக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மின்சாரக் கோளாறை விரைவில் வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மின் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
சுமார் இரண்டாயிரம் மின் பாவனையாளர்களுக்கான மின் விநியோகம் தடைப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புரவி சூராவளியின் தாக்கம் உணரப்பட்ட போதிலும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் எதுவித தடங்களும் இன்றி இடம்பெற்றதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment