கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவர 18ஆம் திகதி அனுமதி கிடைக்கும் - மொடர்னா நிறுவனம் நம்பிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, December 3, 2020

கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவர 18ஆம் திகதி அனுமதி கிடைக்கும் - மொடர்னா நிறுவனம் நம்பிக்கை

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவருவது தொடர்பாக மொடர்னா நிறுவனம் தாக்கல் செய்த விண்ணப்பம் தொடர்பாக வரும் 17ஆம் திகதி எஃப்டிஏ அமைப்பில் கூட்டம் நடைபெறுகிறது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த கொடிய வைரசுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தடுப்பூசிகளை கண்டுபிடித்து வருகின்றன. இதற்கிடையில், அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் - ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இங்கிலாந்து அரசு நேற்று அனுமதி வழங்கியுள்ளது. 

இதையடுத்து, 95 சதவிகித செயல்திறன் கொண்ட பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி அடுத்த வாரம் முதல் இங்கிலாந்து மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவின் மொடர்னா இங்க் நிறுவனமும் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசி 94.1 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என இறுதிக்கட்ட பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதிக்கும்படி அமெரிக்காவின் உணவு மற்று மருந்து நிர்வாகமான எஃப்டிஏ அமைப்பிடம் மொடர்னா கடந்த மாதம் 30ஆம் திகதி விண்ணப்பித்திருந்தது. 

மொடர்னா நிறுவனத்தின் விண்ணப்பம் குறித்து முடிவெடுப்பது தொடர்பாக எஃப்டிஏ அமைப்பு வரும் 17ஆம் திகதி ஆலோசனை கூட்டம் நடத்துகிறது.

இந்த கூட்டத்தில் மொடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியை அமெரிக்காவில் அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதியளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், எஃப்டிஏ ஆலோசனை கூட்டம் நடைபெற்ற 24 முதல் 72 மணி நேரத்திற்குள் (டிசம்பர் 18 முதல் 21 வரை) மொடர்னா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதி கிடைக்கும் என மொடர்னா நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்டெப்பினி பென்சில் தெரிவித்துள்ளார்.

தற்போது பல்வேறு நாடுகளுக்கு கோடிக்கணக்கில் கொரோனா தடுப்பூசியை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ள மொடர்னா அமெரிக்க அரசு அனுமதி அளித்த உடன் தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை தீவிரப்படுத்தும் என ஸ்டெப்பின் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment