சுனாமி ஆழிப் பேரலை ஏற்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் பூர்த்தி - News View

About Us

About Us

Breaking

Friday, December 25, 2020

சுனாமி ஆழிப் பேரலை ஏற்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் பூர்த்தி

கடந்த 2004 டிசம்பர் 26 ஆம் திகதி உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கறுப்பு தினமாகப் பதிவாகிய சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஆசிய நாடுகளில் வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தியது.

ரிக்டர் அளவு கோலில் 9.1 முதல் 9.3 மெக்னிடீயூட்டாக அந்த நில அதிர்வு பதிவாகியிருந்தது.

இதன் காரணமாக இந்து சமுத்திர பிராந்தியத்தில் சுமார் 100 அடி உயரத்திற்கு ஆழிப்பேரலை உருவாகியது.

இதில், இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 14 ஆசிய நாடுகளின் கரையோரங்களை இந்த ஆழிப்பேரலை சூறையாடிச் சென்றது.

குறித்த ஆசிய நாடுகளில் 2 இலட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை இந்த ஆழிப்பேரலை காவுகொண்டது.

இலங்கையில் பதிவான உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரம் என தெரியவந்துள்ளது.

அதில் 2,000 பேர் உலகின் மிக மோசமான ரயில் விபத்து என்று கருதப்படும் பெரலிய தெல்வத்த ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

சுனாமி ஆழிப்பேரலை 16 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று பல மத நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை நோக்கமாகக் கொண்ட தேசியப் பாதுகாப்பு தினத்தைச் சுகாதார வழிகாட்டிகளைப் பின்பற்றி மற்றும் சட்டத்திற்கு அமைவாக மட்டுப் படுத் தப்பட்ட பொதுமக்கள் பங்குபற்றுதலுடன் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுனாமி எனப்படும் ஆழிப் பேரலையால் காவு கொள்ளப்பட்ட உயிர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி உலக மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

உலக வரலாற்றில் ஒரு கறுப்பு அத்தியாயத்தை எழுதிய ஆழிப் பேரலை ஏற்பட்டு 16 ஆண்டுகள் உருண்டோடியுள்ளபோதும், அது ஏற்படுத்திய வடுக்கள் இன்றும் எம் நெஞ்சைவிட்டு நீங்காமலேயே உள்ளன.

ஆழிப் பேரலையினால் உயிரிழந்த அனைத்து மக்களையும் நினைவு கூறும் பொருட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களைக் கோரியுள்ளது.

சுனாமி மற்றும் பிற பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூரும் வகையில் இன்று காலை 9.25 மணி முதல் 9.27 வரையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு மத்திய நிலையம் பொதுமக்களிடம் கேட்டுள்ளது.

No comments:

Post a Comment