(எம்.மனோசித்ரா)
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேதாச ஜனாதிபதியாகியிருந்தால் அவர் வழங்கிய வாக்குறுதியின் படி அவரிடமும் பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளம் 1000 ரூபாவைக் கோரியிருப்போம். எனவே ஜனவரியிலிருந்து அரசாங்கம் பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபாய் அடிப்படை சம்பளத்தை வழங்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதித் தேர்தலின் போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவைப் பெற்றுக் கொடுப்பதாக கூறினார்கள். தற்போடு புதிய அரசாங்கம் ஆட்சி பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. பாராளுமன்றத் தேர்தலும் நிறைவடைந்துள்ளது.
எனவே வாழ்கை செலவு அதிகரித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு வாக்குறுதியளித்தவாறு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
என்னவானாலும் செய்து கம்பனிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து ஜனவரி முதல் 1000 ரூபாய் சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய அரசாங்கத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும்.
பல ஆட்சியாளர்களாலும் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்ட சமூகமாகவே பெருந்தோட்ட சமூகம் காணப்படுகிறது. எனவே தற்போதாவது அவர்களது எதிர்பார்ப்பினை நிறைவேற்ற வேண்டும்.
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ச பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபா வழங்கப்படும் என்று கூறினார். அதற்கேற்ப அவர்கள் செயற்பட வேண்டும். மாறாக தொடர்ந்தும் அந்த மக்களை ஏமாற்ற முற்படக் கூடாது.
பெருந்தோட்ட மக்களின் எதிர்காலத்திற்கு அரசாங்கம் பொறுப்பா? கம்பனிகள் பொறுப்பா? அந்த மக்களின் வாக்குகள் அரசாங்கத்திற்கு முக்கியமுடையதானால் அவர்களையும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.
கம்பனிகள் கூறுவதற்கேற்ப செயற்பட முடியாது. சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகிருந்தால் அவர் கூறிய படி 1500 ரூபாய் அடிப்படை சம்பளத்தை அவரிடமும் கோரியிருப்போம். அடுத்த வருடமும் இதற்கு உரிய தீர்மானம் வழங்கப்படாவிட்டால் நாம் தொழிற்சங்க ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்றார்.
No comments:
Post a Comment