வன்னி காணி பிணக்குகளை உடனடியாக தீர்த்து தருமாறு காதர் மஸ்தான் வேண்டுகோள் - News View

Breaking

Post Top Ad

Sunday, November 29, 2020

வன்னி காணி பிணக்குகளை உடனடியாக தீர்த்து தருமாறு காதர் மஸ்தான் வேண்டுகோள்

வன்னி மாவட்டத்தில் நீண்ட காலமாக ஏற்பட்டிருக்கின்ற காணி சம்பந்தமான பிணக்குகளை உடனடியாக மக்களின் நலன்கருதி மிக அவசரமாக தீர்த்து தருமாறு காணி தொடர்பான அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கோரினார்.

காணி தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், வன்னியிலே இருக்கின்ற சிறந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மல்வத்து ஓயா அதுபோன்று கட்டுக்கரைக் குளங்கள் ஆகியன தேசிய ரீதியில் விவசாயத்துக்கு உந்துதலாக அமைகின்றதாக தொன்றுதொட்டு இருந்து வந்தது. ஆனால் தற்போது அது காடுகள் எனும் ஒரு மாயை கட்டவிழ்த்து விடப்பட்டு மிகவும் பிரபல்யமான விவசாய நிலங்கள் இன்று முடங்கிக் கிடக்கின்றன.

எனவே மக்களின் சுய பொருளாதாரத்தை விருத்தி செய்யும் நோக்கிலே இவ்வாறு கையகப் படுத்தப்பட்டிருக்கின்ற காணிகளை உடனடியாக விடுவித்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு நீங்கள் அனைவரும் இந்த உயரிய சபையில் இருக்கின்ற அனைவரும் இதை கவனத்திற் கொண்டு வன்னியிலே இருக்கின்ற இந்த காணிப் பிரச்சினைகளுக்கு மிகவும் அவசரமாக ஒரு நல்ல தீர்வுத் திட்டத்தினை கொண்டுவர வேண்டுமென இந்த உயரிய சபையிலே நான் முன்வைக்கின்றேன்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறி இருக்கின்ற வன்னி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்நோக்கி செல்வதற்காகவும் அவர்களின் விவசாயங்களை மேன்மைப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகவும், வன்னி மாவட்டத்திலே தற்போது நீண்ட நாட்களாக நிலைக்கொண்டிருக்கின்ற காணிப் பிணக்குகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள்,அதே போல் இராஜாங்க அமைச்சர்கள், உயரதிகாரிகள் அப்பகுதிகளுக்கு வருகைத்தந்து மக்களுக்குரிய காணிகளை விடுவித்து அவர்களின் விவசாய நடவடிக்கைகளை, அதேபோல் பொருளாதார ரீதியான முன்னெடுப்புக்களை செய்வதற்கான அனைத்து செயற்பாடுகளையும் வன்னி மாவட்டத்திலே செய்து தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad