(எம்.மனோசித்ரா)
கொவிட் தொற்றுக்குள்ளான பொலிஸ் உத்தியோகஸ்தர்களுடன் இணைந்து சேவையாற்றிய ஏனைய பொலிஸாரை தனிமைப்படுத்துவதற்காக முகத்துவாரத்தில் விசேட தனிமைப்படுத்தல் நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளது.
மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று செவ்வாய்கிழமை இதனை திறந்து வைத்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், தொற்றுக்குள்ளான பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் விரைவாக குணமடைந்து வருகின்றனர். இன்றும் (நேற்று) 27 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் முழுமையாக குணமடைந்தனர். தொற்றுக்குள்ளான பொலிஸாருடன் சேவையாற்றிய ஏனைய பொலிஸாரை தனிமைப்படுத்துவதற்காக விசேடமாக 3 தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு வடக்கு, தெற்கு மற்றும் மத்திய கொழும்பு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இவை அமைக்கப்பட்டுள்ளன. 150 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. எந்த சந்தர்ப்பத்திலும் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களாக இனங்காணப்படும் பொலிஸார் இவற்றில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
தொற்றாளர்களாகவோ அல்லது அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களாகவோ இனங்காணப்படும் பொலிஸாரின் நலன்களுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை பொலிஸ் முன்னெடுக்க தயாராகவுள்ளது என்றார்.

No comments:
Post a Comment