வடக்கு கிழக்கில் இளைஞர்களுக்கு விவசாயத்திற்கான காணிகள் வழங்கப்படும் - அமைச்சர் சந்திரசேன - News View

Breaking

Post Top Ad

Saturday, November 28, 2020

வடக்கு கிழக்கில் இளைஞர்களுக்கு விவசாயத்திற்கான காணிகள் வழங்கப்படும் - அமைச்சர் சந்திரசேன

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் ஒரு இலட்சம் பேருக்கு காணிகளை வழங்க அரசாங்கமாக நடவடிக்கை எடுத்துள்ளோம், இதில் இப்போது வரையில் ஆறு இலட்சம் கேள்விப்பத்திரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் வடக்கு கிழக்கில் இருந்தே அதிகளவிலான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். வடக்கு கிழக்கில் இளைஞர்களுக்கு விவசாயத்திற்கான காணிகள் வழங்கப்படும், அதில் எமக்கு மகிழ்ச்சியேயெனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை, கடற்தொழில், பெருந்தோட்டத்துறை மற்றும் காணி அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த நாட்டில் காணிப் பிரச்சினை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது, ஆகவே காணி சட்டத்தை திருத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டில் ஒரு இலட்சம் பேருக்கு காணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதில் அந்தந்த பிரதேசங்களுக்கான மக்களுக்கு இதில் முக்கியத்துவம் கொடுக்கப்படும். நாட்டின் அபிவிருத்திக்காகவே இந்த வேலைத்திட்டம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 

காணிகளை வழங்க கேள்விப்பத்திரம் கோரப்பட்ட நிலையில் ஆறு இலட்சம் கேள்விப்பத்திரங்கள் வந்துள்ளது. வடக்கு கிழக்கில் இருந்தே அதிக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு கிழக்கு மக்களையும் நாம் கருத்தில் கொண்டே காணிகளை வழங்குகிறோம். காணி உரிமை உள்ள சகலருக்கும் காணிகளை வழங்குவோம்.

வடக்கு கிழக்கில் இளைஞர்களுக்கு விவசாயத்திற்கான காணிகள் வழங்கப்படும், அதில் எமக்கு மகிழ்ச்சியே. பொதுமக்களின் காணிகளை அனாவசியமாக கையகப்படுத்தி வைத்துள்ளனர், இது குறித்து ஆராயப்படுகின்றது. இவ்வாறு அனாவசியமாக அல்லது கட்டாயமாக தன்னகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள காணிகளை உரிய மக்களுக்கு வழங்குவோம். அவர்கள் விவசாயம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். 

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு முன்னெடுக்கும் சில வேலைத்திட்டங்களில் மாற்றங்களை முன்னெடுக்கவும் உள்ளோம். இதில் பெருந்தோட்ட அமைச்சின் கீழ் அரைவாசி காணிகள் உள்ளது. அதேபோல் நிறுவனங்கள் அளவுக்கு அதிகமான நிலங்களை தன்வசப்படுத்தியுள்ளது.

இவற்றை மீளவும் மறுசீரமைப்பு செய்து அவற்றில் பெருந்தோட்ட பயிர் செய்கையை முன்னெடுக்கவுள்ளோம். ஆணைக்குழுவின் கீழ் உள்ள நிலங்களை ஒரு சிலர் ஊழல் செய்துள்ளனர். இவற்றை ஆராயவும் குற்றவாளிகளை தண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

இலங்கையில் நீதிமன்றத்தில் அதிகளவில் உள்ள வழக்குகளில் காணி வழக்குகளே அதிமகாமும். எனவே காணி வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவரவே நாம் முயற்சிக்கின்றோம். இதற்காக இணக்க சபைகளை உருவாக்கி அதன் மூலமாக வழக்குகளை தீர்க்கவும் முடியாத வழக்குகளை இணக்க சபையின் பரிந்துரையுடன் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவும் தீர்மானித்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad