சிறைச்சாலை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை - News View

About Us

About Us

Breaking

Friday, November 20, 2020

சிறைச்சாலை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை

(நா.தனுஜா) 

இலங்கை சிறைச்சாலையில் இரண்டாவது முறையாகவும் இடம்பெற்றிருக்கும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகளினால் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு ச்சபை வலியுறுத்தியிருக்கிறது. 

கண்டி - போகம்பறை பழைய சிறைச்சாலையில், விளக்கமறியல் உத்தரவின் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சந்தேகநபர்கள் ஐந்து பேர் தப்பியோட முன்னெடுத்த முயற்சியின்போது ஒரு சந்தேகநபர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்திருக்கிறார். தப்பிச் செல்ல முயன்ற கைதிகளை பிடிப்பதற்கு துப்பாக்கிப்பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 

இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச மன்னிப்புச் சபை அதன் டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தியிருக்கிறது.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் அநுராபுரம் சிறைச்சாலையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை மேற்கோள் காட்டியிருக்கும் மன்னிப்புச் சபை, 'இலங்கையில் சிறைச்சாலையில் இரண்டாவது முறையாகவும் இடம்பெற்றிருக்கும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகளினால் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்திருக்கிறது.

அதேவேளை பாரதூரமான தொற்று நோய்ப்பரவல் ஒன்றின் போது சிறைச்சாலைகளில் குறுகிய இடப்பரப்பிற்குள் பெருமளவானோர் உள்வாங்கப்படுவது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகும். 

சிறைக் கைதிகள் பாதுகாப்பாகவும் மனிதாபிமானமுள்ள வகையிலும் தடுத்து வைக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை அதன் டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment