பயங்கரவாதிகளின் தினங்களை கொண்டாடுவது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றமாகும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 25, 2020

பயங்கரவாதிகளின் தினங்களை கொண்டாடுவது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றமாகும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

(செ.தேன்மொழி) 

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, உள்நாட்டு யுத்தத்தின் போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயத்தின் போராளிகள் நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் நோக்கத்தில் அதற்கான அனுமதியை வழங்குமாறு அப்பகுதியில் சிலர் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வுக்கு எதிராக பொலிஸார் தடை உத்தரவு விதித்த போது, அந்த உத்தரவை நீக்குமாறு குறிப்பிட்டு யாழ் மேல் நீதிமன்றத்தில் சிலர் மேன்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ததுடன், அந்த மனுக்களை பரிசீலனை செய்யாமலே நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் கடந்த 20 ஆம் திகதி ஏற்கனவே மாவீரர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதித்திருந்ததுடன், எதிர்வரும் 29 ஆம் திகதி வரையிலும் இந்த நினைவு தினத்தை கொண்டாடக் கூடாது என்று அந்த தடை உத்தரவை நீடித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் 1999 ஆம் ஆண்டிலேயே இந்த இரு தினங்களையும் மாவீரர் தினமாக பெயரிட்டிருந்தார். அந்த தினத்தையே இவர்கள் இவ்வாறு கொண்டாட முயற்சித்து வருகின்றனர். பயங்கரவாதிகளின் தினங்களை கொண்டாடுவது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச் செயற்பாடாகும்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளின் போது, சட்டமா அதிபரின் சார்பில் சிரேஷ்ட சொலிஸ்டர் ஜெனரால் அரிப்பிரியா ஜயசுந்தரம், பிரதி சொலிஸ்டர் ஜெனரால் குமார்ரத்னம், சிரேஷ்ட சட்டதரணி ஜனக்கபண்டார மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும், சட்டநரணியுமான ருவன் குணசேகர ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பாக எவரேனும் செயற்பட்டால் அவர்களை கைது செய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment