(செ.தேன்மொழி)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தெரிந்து கொண்டு அவர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கும் முகமாக புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க போவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
"உங்களது குரலை நாட்டுக்கு அறியச் செய்ய நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோம்" என்னும் தொனிப் பொருளில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்திட்டத்திற்கமைய, நாட்டில் எந்த பகுதிகளிலும் இருக்கும் மக்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் விபரங்களை தெரிவிக்க முடியும் என்றும் கட்சி குறிப்பிட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கட்சி உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்கிரமரத்ன ஆகியோர் இது தொடர்பில் கருத்து தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிப்புகளை எதிர்நோக்கி வரும் மக்கள் 0777 134053, 0777 472331 மற்றும் 0779 540500 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் தெரிவிக்க முடியும்.
இதன்போது எம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதுடன், உங்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் செய்யவும் பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
வைரஸ் பரவலின் முதலாம் அலையின் தாக்கம் ஏற்பட்டுருந்த போதும் நாம் எம்மால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு வழங்கியிருந்தோம். அதேபோன்று இம்முறையும் எம்மால் முடிந்த உதவிகளை செய்வதுடன், மக்களது பிரச்சினைகளை உரிய தரப்பினரின் அவதானத்திற்கும் கொண்டு செல்வோம்.
யாருக்காவது பொருட்கள் தேவைப்பட்டால் உரிய பகுதிகளின் பிரதேச செயலாளர்களுடன் தொடர்பு கொண்டு எம்மால் முடிந்த அளவு பொருட்களை பெற்றுக் கொடுப்போம். இதற்காக எமது சொந்த நிதியை செலவிடுவதுடன், எமது நண்பர்கள், நலன்விரும்பிகள் என்று பலரது உதவிகளையும் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்திருக்கின்றோம்.
ஆளும் தரப்பை பொறுத்தமட்டில் இலகுவில் நிவாரணங்களை பெற்றுக் கொள்ள முடியும். எனினும் இதுவரையில் அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்ற நிவாரணத்திற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அதனால்தான் நாங்கள் இவ்வாறான திட்டமொன்றை செயற்படுத்த தீர்மானித்தோம் என்றும் தெரவித்தனர்.
No comments:
Post a Comment