கட்சிகளின் அரசியல் அபிலாசைகளைக் கைவிட்டு, மக்களை முன்னிறுத்தி புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும் - பெப்ரல் அமைப்பு வலியுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 15, 2020

கட்சிகளின் அரசியல் அபிலாசைகளைக் கைவிட்டு, மக்களை முன்னிறுத்தி புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும் - பெப்ரல் அமைப்பு வலியுறுத்தல்

(நா.தனுஜா)

புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் போது ஒவ்வொரு கட்சிகளுக்குமான அரசியல் அபிலாசைகளைக் கைவிட்டு, நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய வகையில் நீண்டகால அடிப்படையில் மக்களை முன்னிறுத்தி அதனைத் தயாரிப்பது அவசியமாகும் என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி வலியுறுத்தியிருக்கிறார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட ஆணைக்குழுவின் செயலாளருக்கு பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி அனுப்பிவைத்திருக்கும் கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது அண்மைக் காலத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 42 வருட காலத்தில் 20 தடவைகள் திருத்தம் செய்யப்பட்ட அரசியலமைப்பிற்குப் பதிலாக அனைவருக்கும் பொருத்தமானதும் நீண்ட கால நோக்கிலானதுமான புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பது அவசியம் என்பதே எமது அபிப்பிராயமாகும்.

அதற்காக ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தற்போதைய அரசாங்கம் விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்தமை வரவேற்கத்தக்கதாகும். எனினும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் சில கருத்துகளை முன்வைக்க விரும்புகின்றோம்.

அதன்படி புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் போது ஒவ்வொரு கட்சிகளுக்குமான அரசியல் அபிலாசைகளைக் கைவிட்டு, நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய வகையில் நீண்டகால அடிப்படையில் மக்களை முன்னிறுத்தி அதனைத் தயாரிப்பது அவசியமாகும்.

அதேபோன்று இலங்கை இன ரீதியான இளைஞர் எழுச்சியையும் சுமார் மூன்று தசாப்தகால போரை எதிர்கொண்ட நாடாகும். எனவே எதிர்காலத்தில் அவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாதவாறு, அனைத்து இனங்களின் உரிமைகளையும் உறுதிசெய்யும் வகையில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும்.

அடுத்ததாக அடிக்கடி அரசியலமைப்புத் திருத்தத்தை ஏற்படுத்த வேண்டிய நிர்பந்தததைத் தோற்றுவிக்காதவாறு, அனைத்து தரப்பினரதும் வெவ்வேறு அபிப்பிராயங்களையும் விசேட ஆணைக்குழு கருத்திலெடுத்துச் செயற்பட வேண்டும்.

மேலும் தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி நிலையில் மக்களின் ஒட்டுமொத்த அவதானமும் அதிலேயே குவிந்திருக்கிறது. ஆகவே புதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடன் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது குறித்துத் தெளிவுபடுத்தல்/விழிப்புணர்வூட்டல் செயற்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்குகின்றோம்.

அத்தோடு ஆலோசனைகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னதாகப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. எனினும் தற்போதைய சூழ்நிலையில் அக்காலவரையறை எவ்விதத்திலும் போதுமானதல்ல. ஆகவே மக்கள் தமது ஆலோசனைகளை வழங்குவதற்கு போதிய கால அளவையும், ஆலோசனைகளைப் பெறுவதற்கான மாவட்ட ரீதியான கட்டமைப்பக்களையும் உருவாக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment