அரசாங்கத்திற்கு கிடைத்த கோடிக்கணக்கான நிதிக்கு என்ன ஆயிற்று ? - வைத்தியசாலைகள் நோயாளர்களை பொறுப்பேற்பதை நிராகரிக்கின்றன : முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 5, 2020

அரசாங்கத்திற்கு கிடைத்த கோடிக்கணக்கான நிதிக்கு என்ன ஆயிற்று ? - வைத்தியசாலைகள் நோயாளர்களை பொறுப்பேற்பதை நிராகரிக்கின்றன : முஜிபுர் ரஹ்மான்

(செ.தேன்மொழி)

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்திற்கு கிடைத்த கோடிக்கணக்கான நிதிக்கு என்ன ஆயிற்று ? உலக வங்கி யுனிசெப் ஊடாக இலங்கைக்கு 180 மில்லியன் ரூபா கடன் வழங்குவதாகக் கூறியும் அந்நிறுவனத்தின் கணக்காய்விற்கு அஞ்சியே அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்திடம் முறையான திட்டங்கள் எதுவும் இல்லை. வைரஸ் பரவல் தொடர்பிலும், அதனை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் ஆளும் தரப்பினர் எவருமே பேசுவதில்லை.

வேறு நபர்களை கொண்டே மக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான சட்டவிதிகளை உருவாக்குவது தொடர்பிலும் ஆரம்பத்தில் கவனம் செலுத்தவில்லை. 

இந்நிலையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலம் பூர்த்தியாகும் தருவாயில், சுகாதார துறையை முன்னேற்றுவதற்காக என்ன செய்துள்ளனர்.

சுகாதார அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாக போகின்றது. எனினும் சுகாதார துறையின் வளர்ச்சிக்காக அவர் என்ன செய்துள்ளார்? 

இதுவரையில் அவசர சிகிச்சை பிரிவுக்காக கட்டில் ஒன்றையாவது பெற்றுக் கொண்டுள்ளாரா? மாறாக மந்திர நீர் அடங்கிய மண் பானையை ஆற்றில் வீசி, நாட்டு மக்களை மூட நம்பிக்கையில் மூழ்கடித்துள்ளார்.

இதேவேளை, சுகாதார பணிப்பாளர் நாயகம் எந்தவொரு நோயாளரையும் வைத்தியசாலையில் ஏற்றுக் கொள்ளுமாறு அறிவித்தல் விடுத்துள்ள போதிலும், கொழும்புக்குள் இருக்கும் தனியார் வைத்தியசாலைகள் நோயாளர்களை பொறுப்பேற்பதை நிராகரிக்கின்றன.

அவ்வாறு நோயாளர் ஒருவரை பொறுப்பேற்பது என்றால் முதலில் பி.சி.ஆர். பரிசோதனைகளை செய்யுமாறும், வைத்தியசாலையின் பேரில் 15 இலட்சம் ரூபா பணத்தை வைப்பிலிடுமாறும் தெரிவிக்கின்றது. 

இந்நிலையில் தற்போது வைத்தியசாலைகளும் மோசடிகளில் ஈடுபட்டுவருவதாகவே எமக்கு தோன்றுகின்றது. இதனால் மக்களே தொடர்ந்தும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அதனால், தொடர்ந்தும் மக்களது வாழ்க்கையுடன் விளையாடுவதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment