இராதாகிருஸ்ணன் மலையக கல்வி வளர்ச்சிக்கு செய்த சேவைகள் என்ன? - எடுப்பார் பிள்ளை போல பிழையான நபர்களுக்கு துணைபோகக்கூடாது : கணபதி கனகராஜ் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 5, 2020

இராதாகிருஸ்ணன் மலையக கல்வி வளர்ச்சிக்கு செய்த சேவைகள் என்ன? - எடுப்பார் பிள்ளை போல பிழையான நபர்களுக்கு துணைபோகக்கூடாது : கணபதி கனகராஜ்

மலையக கல்வித்துறைக்கு கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் பாரியளவு சேவையை செய்வதற்கு கிடைத்த வாய்ப்பை முழுமையாக தவறவிட்டவர் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

வலயக் கல்வி காரியாலயங்கள் காணப்படுகின்ற ஊழல், மோசடிகளுக்கு முட்டுக்கொடுத்து அடிமட்ட அரசியல் நடத்தும் நிலைக்கு இராதாகிருஷ்ணன் தள்ளப்பட்டிருக்கிறார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராக இருந்த காலத்தை விட அதற்குப் பிற்பட்ட காலத்திலேயே மத்திய மாகாண தமிழ் கல்வி மிகப்பெரும் முன்னேற்றத்தைக் கண்டது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அப்போதைய இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் அணியுடன் இணைந்து நயவஞ்சகமாக மாகாண சபைத் தேர்தல்களை தள்ளி வைத்த பின்புதான் மத்திய மாகாண தமிழ் கல்வி துறையில் அதிக அளவு அரசியல் தலையீடுகள் தலைவிரித்தாடியது.

இலங்கையில் எங்காவது ஆசிரியர் சேவையில் உள்ளவர்கள் கோட்டக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்களா? நல்லாட்சி அரசாங்க காலத்தில் அட்டன் கல்வி வலயத்தில் இது நடந்திருக்கிறது. 

அத்துடன் போதியளவு முதலாம் தர அதிபர்கள் இருக்கின்ற நிலையில் அதிபர் சேவையில் மூன்றாம் தர அதிபர் ஒருவர் கோட்டக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது இதே கல்வி வலயத்தில்தான்.

அத்துடன் அதிபர் பதவிகள் வழங்குவதற்கு கையூட்டல் பெறப்பட்டிருக்கிறது. வால் பிடிப்பவர்களும், எடுபிடி வேலை செய்பவர்களும் வளவாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். 

அதிபர் பதவி வெற்றிடமாக உள்ள பாடசாலைகளுக்கு அதிபர் சேவைக்கு சிபாரிசு செய்யப்பட்டவர்கள், அவர்கள் அதிபர் பதவி வகித்த பாடசாலை மாணவர்களுக்கு செய்த சேவைகள் மற்றும் பாடசாலைக்கு பெற்றுக் கொடுத்த பரீட்சை பெறுபேறுகள் என்பவற்றை கவனத்தில் எடுத்து சிபாரிசுகள் மேற்கொள்ளப்பட்டனவா? 

பாடசாலைகளில் அதிபர்களாக நியமிக்கப்படுபவர்கள் சிறந்த கல்வி தராதரம் உடையவர்களாக இருக்க வேண்டும் என்பது உண்மையான விடயம்.

ஆனால் அந்த அதிபர்கள் கடந்த காலத்தில் பதவி வகித்த பாடசாலைகளில் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை உயர்த்தி சமூகத்துக்கு சேவை செய்திருக்க வேண்டியது அதைவிட முக்கியமான விடயம். அதைவிடுத்து பதவி உயர்வு நோக்கத்திற்காக பாடசாலை மாணவர்களை உதாசீனம் செய்துவிட்டு தான் படித்து இருப்பதாக தம்பட்டம் அடிப்பது தனக்குப் பெருமையாக இருக்கலாமே தவிர அதனால் சமூகம் பெருமைப்பட முடியாது. 

இவ்வாறானவர்களுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் துணை போவது எதனை அடிப்படையாக வைத்து என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

நான் அறிந்த வகையில் தற்போது சென் ஜோன் பொஸ்கோ கல்லூரிக்கு அதிபராக நியமிக்கப்பட்டு இருப்பவர் அட்டன் பகுதியிலேயே மிகவும் பின்தங்கிய பாடசாலையாக இருக்கின்ற பின்னோயா கணேசா பாடசாலையில் மத்திய மாகாணத்திலேயே அதிகூடிய பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக் கொடுத்த அதிபராகவும், அதற்காக மத்திய மாகாண ஆளுனரால் கௌரவிக்கப்பட்ட அதிபராகவும் இருந்திருக்கிறார். எ

னக்குத் தெரிந்த வகையில் 1 அடி பாடசாலை ஒன்றுக்கு அதிபர் சேவையின் முதலாம் தரம் தகுதியாக கொள்ளப்படுகிறது. இந்தத் தகுதி நியமிக்கப்பட்ட அதிபருக்கு இருப்பதாகவும், இவரை வலயக் கல்விப் பணிப்பாளர் சிபாரிசு செய்திருப்பதாகவும் மாகாண கல்வித் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் மத்திய மாகாண கல்வித் துறையின் வளர்ச்சிக்கு குரல் கொடுக்க வேண்டுமே தவிர தகவல்களை சரியாக அறிந்துகொள்ளாமல் தனிப்பட்ட ஒருவருக்காக அறிக்கை விடுவது பொருத்தமற்றதாகும். 

வலயக் கல்வி பணிமனை இரவு நேர மதுபான விடுதியாக மாற்றப்பட்டிருக்கிறது. கல்வி காரியாலயத்தில் குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கும் கூட்டம் பற்றி எல்லாம் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரின் கண்ணுக்கு தெரியவில்லை.

கல்வி இராஜாங்க அமைச்சராக இராதாகிருஷ்ணன் அவர்கள் பதவி வகித்த காலத்தில் எத்தனை பேர் ஆசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறார்? நல்லாட்சி அரசாங்கம் அமைந்த உடனேயே மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைக்க போவதாக கூறி அமைச்சரின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா? 

முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் பெற்றுக் கொடுத்த ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தர ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க முடியாத இராஜாங்க அமைச்சர் இன்று அரசியல் தலையீடு குறித்து பேசுவது வேடிக்கையானது. 

முன்னைய அரசாங்கம் நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்திய அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் மலையக தமிழ் பாடசாலைகளில் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் அரைகுறையாக குட்டி சுவர்களைப் போல் காட்சியளிப்பது முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருக்கு தெரியாத விடயமல்ல. இதைக்கூட முடிப்பதற்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 

இவ்வாறான குறைபாடுகளை தன்னகத்தே வைத்துக்கொண்டு மற்றவர்களை விமர்சிப்பது வேடிக்கையான விடயமாகும். அரசியல்வாதி என்ற அடிப்படையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனுக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெறலாம். ஆனால் அந்த முறைப்பாடுகளை அலசி ஆராய்ந்து அறிக்கை விடுவதே பொருத்தமானதாகும். 

முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் எடுப்பார் பிள்ளை போல பிழையான நபர்களுக்கு துணைபோவது மலையக கல்வித்துறைக்கு ஆரோக்கியமாக அமையாது என்றார்

No comments:

Post a Comment