ஊரடங்குச் சட்டம் இன்று முதல் நீக்கம் : தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்குள் பிரவேசிக்கவோ அங்கிருந்து வௌியேறவோ முடியாது - சிவில் உடைகளில் பொலிஸ் அதிகாரிகள் கண்காணிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, November 8, 2020

ஊரடங்குச் சட்டம் இன்று முதல் நீக்கம் : தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்குள் பிரவேசிக்கவோ அங்கிருந்து வௌியேறவோ முடியாது - சிவில் உடைகளில் பொலிஸ் அதிகாரிகள் கண்காணிப்பு

மேல் மாகாணம் உட்பட சில பகுதிகளுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும், கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டிருக்குமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க மேல் மாகாணத்தின் சில பொலிஸ் பிரிவுகள் உட்பட மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய கொழும்பு, கம்பஹா, களுத்துறை குருணாகல், கேகாலை மாவட்டங்களின் சில பிரதேசங்களே மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

அது தொடர்பில் நேற்று அரசாங்க தகவல் திணைக்களம் விசேட அறிவித்தலை வெளியிட்டிருந்த நிலையில், கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, முகத்துவாரம், புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, கிரேண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, மாளிகாவத்தை, டாம் வீதி, தெமட்டகொடை, வெல்லம்பிட்டி, பொரளை, வாழைத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்காக மூடப்பட்டிருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, பேலியகொடை, கடவத்தை, ராகமை, நீர்கொழும்பு, பமுனுவ, ஜா-எல, சப்புகஸ்கந்த ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்காக மூடப்படட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் ஹொரணை, இங்கிரிய பொலிஸ் நிர்வாக பிரதேசங்கள் மற்றும் வேகட மேற்கு கிராம சேவை அதிகாரி பிரிவு, குருநாகல் மாவட்டத்தில் குருநாகல் நகர எல்லைக்குட்பட்ட பகுதி, குளியாப்பிட்டி பொலிஸ் நிர்வாக பிரதேசம் கேகாலை மாவட்டத்தில் மாவனல்லை மற்றும் ருவான்வெல்லை பொலிஸ் நிர்வாக பிரதேசங்களும் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ளன.

மேற்படி பிரதேசங்களிலிருந்து எக்காரணத்திற்காகவும் எவரும் வெளியில் செல்லவோ அல்லது வெளி பிரதேசங்களிலிருந்து மேற்படி பிரதேசங்களுக்குள் உட் பிரவேசிப்பதோ முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பிரதேச மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டுமென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் சுகாதார சேவைகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் அவசியம் ஏற்படுமானால் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் மற்றும் ஏனைய எந்த ஒரு நோய்க்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் அருகிலுள்ள ஆஸ்பத்திரிகளுக்கு செல்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக எந்த அனுமதியையும் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

எனினும் மிக முக்கியமான காரணங்களுக்காக அனுமதிகளைப் பெற்றுக் கொள்ள தமது பிரதேச பொலிஸ் மற்றும் பொது சுகாதார அதிகாரிகளின் அனுமதியை பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறு அனுமதி பெறாத எவரும் வெளியில் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்களென்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வசிக்கும் பகுதிகளை கண்காணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், சிவில் உடைகளில் பொலிஸ் அதிகாரிகளால் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஆகவே, சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வீடுகளிலேயே இருக்குமாறும் ஏதேனும் அவசர தேவைகள் ஏற்படும் பட்சத்தில் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, இன்றைய தினம் மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நிலையில் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் மட்டுப்படுத்த அளவிலேயே ஊழியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள வேண்டுமென பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

வழமைபோன்று பஸ் மற்றும் ரயில் சேவைகள் அலுவலக சேவைகளாக நடைபெறும் என்றும் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்து மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பயணிகளே பயணிக்க முடியுமென்றும் அதேநேரம், தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் பஸ் மற்றும் ரயில்கள் நிறுத்தப்படக்கூடாதென்றும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

ரயில்வே போக்குவரத்து பொறுப்பதிகாரி ரஞ்சித் பத்மலால், அது தொடர்பில் தெரிவிக்கையில், காலையிலும் பிற்பகலிலும் அலுவலக ரயில் சேவைகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். 

அதேவேளை, மேலும் இரண்டு மூன்று தினங்களுக்குள் கொரோனா வைரஸ் சூழ்நிலையில் கடைப்பிடிக்க வேண்டிய போக்குவரத்து கொள்கை ஒன்றை வெளியிடப்போவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். 

அதற்கிணங்க ஆசனங்களின் எண்ணிக்கைக்கு இணங்கவே பயணிகள் பயணிக்க முடியும். தனிமைப்படுத்தலுக்கான பிரதேசங்களில் பயணிக்கும் பஸ் வண்டிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கிணங்க ஒரு ஆசனத்தில் ஒருவர் மட்டுமே அமர முடியும்.

பயணிகள் பஸ்களில் நின்று கொண்டு பயணித்தால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாதென்ற எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment