பிள்ளையான் மீதான வழக்கு ஒத்தி வைப்பு - கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி வழங்கினார் சிறைச்சாலைகள் ஆணையாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 10, 2020

பிள்ளையான் மீதான வழக்கு ஒத்தி வைப்பு - கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி வழங்கினார் சிறைச்சாலைகள் ஆணையாளர்

பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு இன்று (10) மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி டி. சூசைதாசன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, குறித்த வழக்கு விசாரணை மேற்கண்டவாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்பட இவ்வழக்கின் சந்தேக நபர்கள் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சார்பிலான சட்டத்தரணிகள் கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கொழும்பிலிருந்து வர முடியாததால், எதிர்வரும் 24ஆம் திகதிக்கு குறித்த வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சந்திரகாந்தனின் சார்பில் சட்டத்தரணி ஏ.உவைஸ் மற்றும் அரச தரப்பு சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் ஆகியோர் ஆஜராகினர்.

கடந்த மாதம் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நகர்வு மனு தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் அனுமதியைப் பெற்று அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும் என மேல் நீதிமன்ற நீதிபதியினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகரின் ஊடாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியினை சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்திரகாந்தனுக்கு வழங்கியுள்ளதாக சந்திரகாந்தனின் சட்டத்தரணி ஏ. உவைஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் சந்திரகாந்தன் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி ஏ. உவைஸ் மேலும் குறிப்பிட்டார்.

(எம்.எஸ்.எம். நூர்தீன், வ.சக்திவேல், உதயகாந் உதயகுமார்)

No comments:

Post a Comment