கொரோனா தொற்று அதிகரிப்பு - வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் உயர்மட்ட மாநாடு - News View

About Us

About Us

Breaking

Monday, November 2, 2020

கொரோனா தொற்று அதிகரிப்பு - வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் உயர்மட்ட மாநாடு

எம்.எஸ்.எஸ்.முர்ஷித்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலைமை தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் உயர்மட்ட மாநாடு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவு முழுவதும் ஒன்பது நாட்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு காணப்பட்டு வருகின்ற நிலையில் வாழைச்சேனை பிரதேசத்திற்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.சி.என்.ஜெயசுந்தர தலைமையில் விசேட கூட்டம் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள மக்களை சுகாதார பிரிவினர், பாதுகாப்பு படையினர், அரச அதிகாரிகள் மாத்திரம் கட்டுப்பட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது. பொதுமக்கள் கூடிய பங்களிப்பு வழங்கினால் மாத்திரம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பத்த முடியும் என்று கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ. நஜீப்கான் தெரிவித்தார்.
அத்தோடு நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றானவர் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சையில் கடந்த 26ஆம் திகதி தோற்றியதாகவும், இவரது பரீட்சை மண்டபத்தில் 53 பேர் பரீட்சை எழுதியதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் தகவல் நிலையில் இவர்கள் தொடர்பான விபரங்கள் திரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நடமாடும் வியாபர நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள் பொதுமக்கள் அதிகம் நின்று பொருட்களை விற்பனை செய்யாத வகையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நிபந்தனைகளை மீறி வெளியில் வருபவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார பிரிவினர், பாதுகாப்பு படையினர், அரச அதிகாரிகள் முழு நேரமும் கண்கானிப்பில் ஈடுபடுவார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment