கைதான யாழ். பல்கலைக்கழக மாணவன் விடுவிப்பு! - News View

Breaking

Post Top Ad

Sunday, November 29, 2020

கைதான யாழ். பல்கலைக்கழக மாணவன் விடுவிப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் இன்று (29) கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் மசகையா தர்ஷிகன் என்பவரே இவ்வாறு இன்றிரவு 7.45 மணியளவில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மாணவன் கோப்பாய் பொலிஸாரால் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு சென்ற சட்டத்தரணிகள் வி.திருக்குமரன், வி.மணிவண்ணன் இருவரும் மாணவனை விடுவிக்க பொறுப்பதிகாரியுடன் பேச்சு நடத்தினர்.

கைது செய்யப்பட்ட மாணவன் எம்.தர்ஷிகனை உடனடியாக விடுவிப்பதற்காக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் நடவடிக்கைகளில் இறங்கியிருந்த நிலையில், வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் மாணவன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் இவ்விடயத்தில் தலையிட்டு மாணவனை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ணவுடன் தொடர்புகொண்டு பேசியிருந்தார்.

இன்று நடைபெற்றது தமிழ் மக்களுடைய ஒரு கலாசார நிகழ்வு என்பதை அங்கஜன் விளக்கியதையடுத்து, அதனை ஏற்றுக் கொண்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொண்டு குறிப்பிட்ட மாணவனை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதேவேளையில், மாணவன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, கோப்பாய் போலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்ட துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, மாணவனை உடனடியாக விடுதலை செய்யுமாறு கேட்டுள்ளார்.

பொலிஸ் சம்பிரதாயங்களை முடித்த பின்னர் மாணவனை விடுதலை செய்வதற்கு கோப்பாய் பொலலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இணங்கியிருந்தார். அதற்கையமைய வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் மாணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad