இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் வருகையில் எமக்கு சந்தேகம் ஏற்படுகிறது - அரசாங்கம் ராஜபக்ச கொத்தணியை பாதுகாக்கும் நடவடிக்கையையே முன்னெடுத்துள்ளது : ஜே.சி.அலவத்துவல - News View

Breaking

Post Top Ad

Saturday, November 28, 2020

இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் வருகையில் எமக்கு சந்தேகம் ஏற்படுகிறது - அரசாங்கம் ராஜபக்ச கொத்தணியை பாதுகாக்கும் நடவடிக்கையையே முன்னெடுத்துள்ளது : ஜே.சி.அலவத்துவல

(எம்.மனோசித்ரா)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கப் போவதில்லை என்று அரசாங்கம் கூறினாலும், இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் வருகையில் எமக்கு சந்தேகம் ஏற்படுகிறது. எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவே அறியப்படுகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் கொவிட் அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ள நிலையில் சீனா, அமெரிக்கா, இந்தியா என ஒவ்வொரு பிரிவினரும் நாட்டுக்கு வர வேண்டியதன் அவசியம் என்ன? அவர்களுடன் இலங்கை அரசாங்கம் எவ்வகையான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுகிறது? அரசாங்கத்தின் பிழையான வெளிநாட்டு கொள்கைகளால் நாடு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சீனா, இந்தியா, அமெரிக்கா என வெளிநாட்டு அழுத்தங்களில் மத்தியில் இலங்கை சிக்கியுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.

இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் வருகையில் எமக்கு சந்தேகம் ஏற்படுகிறது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் அரசாங்கம் வெவ்வேறு கருத்துக்களை கூறினாலும், மறுபுறுத்தல் அதனை இந்தியாவிற்கு வழங்குவதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச வழங்கிய வாக்குறுதிகளை மீறி தற்போது அவர்களின் குரல் அடக்கப்படுகிறது.

கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்களின் உயிரை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தமைக்கான காரணம் தமது பலத்தை தக்க வைத்துக் கொண்டு இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கேயாகும்.

கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மூன்றாம் தவணைக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் மேல் மாகாணம் மாத்திரமின்றி ஏனைய சில பகுதிகளிலும் நகர்புற பாடசாலைகள் இன்னும் திறக்கப்படவில்லை. திறக்கப்பட்டுள்ள பாடசாலைகளிலும் மாணவர்களின் வருகை மிகக் குறைவாகவே உள்ளது. மாணவர்களின் பாடசாலை போக்குவரத்து சேவையிலும் சிக்கல் காணப்படுகிறது.

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையிலிருந்து இரண்டாம் அலை உருவான போதிலும் அதற்கு எதிராக இதுவரையில் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறித்த தொழிற்சாலையின் மூலம் அரசாங்கத்திற்கு இலாபம் கிடைத்தாலும், இந்த கொத்தணியின் பின்னர் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும்.

கொவிட் தொற்றால் வருமானத்திற்கான வழியை இழந்தவர்களுக்காக எமது அயல் நாடான இந்தியா தேசிய வருமானத்தில் 15 சதவீதத்தை ஒதுக்கியுள்ளது. இதேபோன்று ஐரோப்பிய நாடுகளும் 10 சதவீதத்திற்கும் அதிக நிதியை ஒதுக்கியுள்ளன. ஆனால் இலங்கை அவ்வாறு எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. நிவாரணம் வழங்குவதற்காக 0.03 வீத நிதி மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது மாத்திரமின்றி தடுப்பு மருந்தினைப் பெற்றுக் கொள்வதற்கும் அரசாங்கம் எந்த நடவடிக்கைகயும் எடுக்கவில்லை.

ஆட்சியை பொறுப்பேற்று ஒரு வருட காலத்திற்குள் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதோடு, நாட்டையும் வீழ்ச்சியடையச் செய்துள்ளது. நாட்டு மக்கள் இவ்வாறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள போதிலும் அரசாங்கமானது தமது பலத்தை ஸ்திரப்படுத்தி ராஜபக்ச கொத்தணியை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கையையே முன்னெடுத்துள்ளது. அதன் காரணமாகவே இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் புதிய அமைச்சுக்கான நியமனங்கள் வழங்கப்படுகின்றன என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad