சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - யாழ். மாநகர முதல்வர் - News View

About Us

About Us

Breaking

Monday, November 2, 2020

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - யாழ். மாநகர முதல்வர்

யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சமூக இடைவெளி, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்படுகின்ற வர்த்தக நிலையங்கள் உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ். மாநகர சபையின் முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை தடை செய்துள்ளது.

அது மட்டுமன்றி சுகாதார நடைமுறைகளை மீறி செயற்படுபவர்கள் மீதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவ்வாறான நிலையில் யாழ்.மாவட்டத்தையும் பாதுகாக்கின்ற பொறுப்பு அனைவருக்கும் உள்ளது அதற்கமையவே மாவட்டம் தோறும் பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அவ்வாறு யாரும் வருகை தந்திருந்தால் அந்தந்தப் பிரதேசங்களில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அல்லது கிராம அலுவலர்கள் பொலிஸாருக்கு அறிவித்து அவர்களைப் பாதுகாப்பதுடன் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ளும் விதத்தில் தனிமைப்படுத்தல் மேற்கொள்ளும் விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அது மட்டுமன்றி யாழ். நகரைப் பொறுத்தவரையில் அதிக நடமாட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் இதனை மீறுகின்ற வர்த்தகர்கள் உணவகங்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

உணவகங்கள் தமது உணவுகளை பொதி செய்தே விற்பனை செய்தல் வேண்டும் அதேபோன்று பொது மக்களும் உணவகங்களுக்குச் சென்று அமர்ந்து உண்ணுதல் தடை செய்யப்பட்டுள்ளதுடன் உணவுகளை பொதி செய்து தங்கள் இருப்பிடங்கள் அல்லது அலுவலகங்களில் கொண்டு சென்று உண்ண முடியும் இதனை விடுத்து உணவங்களில் உண்பது தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப் பெற்றால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

நேற்றைய தினத்தில் யாழ் நகரப் பகுதிக்கு பொலிஸார் ஆணையாளர் பிரதேச செயலர் பொதுச் சுகாதாரப் பரிசோகர் உட்பட நாம் அனைவரும் விஜயம் மேற்கொண்டு குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment