அரசாங்கத்தின் வரிக் கொள்கையே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் - அரசாங்கம் தெரிவித்துள்ள எந்த பொருளுக்கும் விலை குறையவில்லை : முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 12, 2020

அரசாங்கத்தின் வரிக் கொள்கையே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் - அரசாங்கம் தெரிவித்துள்ள எந்த பொருளுக்கும் விலை குறையவில்லை : முஜிபுர் ரஹ்மான்

(ஆர்.யசி. எம்.ஆர்.எம்.வஸீம்) 

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக தெரிவித்து வந்த அரசாங்கத்தினால், இருந்த பொருளாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியாமல் போயுள்ளது. அரசாங்கத்தின் வரிக் கொள்கையே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாகும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 2020ஆம் வருடத்துக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகின்றது, அதிகாரத்துக்கு வரும்போது நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக தெரிவித்து வந்த விடயங்களை பார்க்கும்போது, நாட்டின் பொருளாதாரம் எந்தளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதை காணமுடிகின்றது. 

நாட்டின் அனைத்து வருமான வழிகளும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் அரசாங்கம் பொருளாதார வீழ்ச்சியை கொரோனாவை காட்டி மறைக்க முயற்சிக்கின்றது. கொரோனா தொற்று நாட்டுக்குள் வருவதற்கு முன்னரே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. அரசாங்கத்தின் வரி கொள்கையின் பிரதிபலிப்பே இந்த பொருளாதா வீழ்ச்சிக்கு காரணமாகும். 

அரசாங்கத்தின் வருமான வழிகள் குறைவடைந்திருப்பதாக அரசாங்கம் இன்று தெரிவிக்கின்றது. அப்படியானால் எதற்காக வட் வரியில் குறைப்பை ஏற்படுத்தினீர்கள் என கேட்கின்றேன்.

அத்துடன் இன்று கொழும்பு துறைமுகத்தில் பணிகள் செயலிழந்துள்ளன. பொருட்கள் பரிமாற்றல் மற்றும் ஏற்றுமதிகள் அடங்கிய 42 ஆயிரம் பாரஊர்திகள் துறைமுகத்தில் தேங்கி நிற்கின்றன. 

அதேபோன்று கொழும்பு துறைமுகத்தின் வெளிச் செல்லும் பிரிவில் 25 கப்பல்கள் நங்கூரமிட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் இருக்கும் பொருட்களை துறைமுகத்துக்கு இறக்கிக் கொள்ள முடியாமல் இருக்கின்றது.

அதனால் இன்று கிழங்கு வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்களுடன் துறைமுகத்தை நோக்கி வந்த கப்பலை நிறுத்த இடவசதி இல்லாததனால் தென்னிந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றது. 

இவ்வாறான நிலையில் பொருளாதாரத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும். நாட்டின் பொருளாதாரத்தின் கேந்திர நிலையமான கொழும்பு துறைமுகம் இன்று செயலிழந்துள்ளது. 

அதேபோன்று அரசாங்கம் ஆட்சிக்கு வந்த தினத்தில் இருந்து அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதாக தெரிவித்து வந்திருக்கின்றது. இதுவரை அதனை செயற்படுத்த முடியாமல்போயிருக்கின்றது. 

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பதாக தெரிவித்து கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 10 வர்த்தமானி அறிவிப்புகளை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் தெரிவித்துள்ள எந்தவொரு பொருளினதும் விலை குறையவில்லை. என்றார்

No comments:

Post a Comment