முல்லைத்தீவு, மாங்குளத்தில் மீட்கப்பட்ட உடற்பாகங்கள் விடுதலைப் புலிகளுடையதா? - உடற்கூற்றுப் பரிசோதனைகள் ஆரம்பம்! - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 10, 2020

முல்லைத்தீவு, மாங்குளத்தில் மீட்கப்பட்ட உடற்பாகங்கள் விடுதலைப் புலிகளுடையதா? - உடற்கூற்றுப் பரிசோதனைகள் ஆரம்பம்!

இம்மாதம் தொடக்கத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு பகுதியில் மனித எச்சங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருந்தது. தற்போது அகழ்வு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த உடல் பாகங்கள் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு மாங்குளம் வீதியின் ஒன்பதாவது கிலோ மீட்டர் பகுதியில் கரிப்பட்டமுறிப்பு சந்திக்கு அருகாமையில் உள்ள விவசாய காணியில் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு நெல் விதைக்கப்பட்ட நிலையில் மண் வெட்டி கொண்டு குறித்த வயல் நிலங்களுக்கான வரம்புகளை அமைக்க முற்பட்டபோது வெடிபொருள் இருந்ததை அவதானித்தவர்கள் மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் கடந்த மூன்றாம் திகதி வெடிபொருளை பார்வையிட சென்ற மாங்குளம் பொலிசாரால் வெடிபொருளுக்கு அண்மையில் இவ்வாறு மனித எச்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதியை அடையாளப்படுத்தி மூன்றாம் திகதி முதல் நேற்று செய்வாய்க்கிழமை வரை குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றையதினம் அகழ்வு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றில் அனுமதி கோரியிருந்த நிலையில் நேற்றையதினம் குறித்த பகுதியில் அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்காக தடவியல் பொலிசார், விசேட அதிரடிப் படையினர், சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டவர்கள் அழைக்கப்பட்ட நிலையில் பிற்பகல் 1.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார் அவர்கள் சம்பவ இடத்தை வருகை தந்து நேரில் பார்வையிட்டார்.

குறித்த இடத்தை பார்வையிட்ட நீதிபதி முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய நிபுணர் கே.வாசுதேவா அவர்களுடைய தலைமையில் குறித்த இடத்தில் அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறும் குறித்த இடத்தில் இருக்கின்ற வெடிபொருளை விசேட அதிரடிப் படையினர் அகற்றுவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த இடத்தில் இருந்த வெடிபொருளை விசேட அதிரடிப் படையினர் அகற்றியதை தொடர்ந்து நேற்று குறித்த பகுதியில் இருந்த எச்சங்கள் மீட்பதற்கான அகழ்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இதனடிப்படையில் குறித்த இடத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினுடைய உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற இலக்கத்தகடு சயனைட் குப்பி மற்றும் அவர்களுடைய சீருடையின் பாகங்கள், காலணிகளின் பாகங்கள் மற்றும் உடற் பாகங்கள், துப்பாக்கி ரவைகள் என்பன மீட்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மாலை 5 மணி வரை குறித்த இடத்தில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த இடத்தில் இருந்த தடய பொருட்கள் அனைத்தும் சட்ட வைத்திய அதிகாரியினால் எடுத்து செல்லப்பட்டுள்ளது. 

நேற்றோடு அகழ்வு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் சட்ட வைத்திய அதிகாரிகளின் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த இடத்தில் மீட்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தகட்டில் ஐ 1606 என்ற இலக்கம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீட்கப்பட்ட குறித்த உடற்பாகங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினுடைய போராளி ஒருவர் உடையதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு நிருபர்

No comments:

Post a Comment