வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவு - கட்டம் கட்டமாக வியாபார நிலையங்களை திறக்க அனுமதி - News View

About Us

About Us

Breaking

Friday, November 20, 2020

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவு - கட்டம் கட்டமாக வியாபார நிலையங்களை திறக்க அனுமதி

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கடந்த 26 நாட்களாக அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டது.

பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவினைச் சேர்நத பலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகினர். 
அதனைத் தொடர்ந்து கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று தெற்கு மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. 

இதன் காரணமாக வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் முற்றுமுழுதாக திறக்கப்படாமல் கட்டம் கட்டமாக வியாபார நிலையங்களை திறக்குமாறு பொலிஸார் மற்றும் பிரதேச செயலகத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. 

இந்த நிலையில் பலசரக்கு கடைகள், சுப்பர் மார்க்கட், வெதுப்பகம், மருந்தகம், பழக்கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் என்பன முதல் கட்டமாக திறக்கட்ட நிலையில் பொதுமக்களின் நடமாட்டாம் குறைவாகவே காணப்படுகின்றது. மக்கள் மத்தியில் இன்னும் கொரோனா அச்சம் நீங்கவில்லை என்பதை காண முடிகின்றது. 
அந்த வகையில் சனிக்கிழமை மரக்கறிச் சந்தை, மீன் சந்தை, பொதுச் சந்தை மற்றும் உணவகங்கள் திறப்பதற்கும், ஞாயிற்றுக்கிழமை ஹாட்வெயார், ஆடையகம், சிகையலங்கார நிலையங்கள் தவிர்ந்த ஏனைய கடைகள், வியாழக்கிழமை சிகையலங்கார நிலையங்கள் என்பன கட்டம் கட்டமாக திறப்பதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு கட்டுப்பத்தப்பட்ட நிலையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மக்களின் பாதுகாப்பு கருதி விசேட கலந்துரையாடல் ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக், செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர், செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
அத்தோடு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தாக்கம் அதிகம் காணப்பட்ட நிலையில் இங்குள்ள மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு விசேட கலந்துரையாடல் செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைத், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.அஷ்ரப், செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். 

கொரோனா தொற்று அபாயம் காரணமாக வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒழுங்கு முறைகள் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment