கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த வாழைச்சேனை மீனவர்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 15, 2020

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த வாழைச்சேனை மீனவர்கள்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீனவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவில்லை என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 25ம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல் வரை வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டு இன்று வரை அமுலிலுள்ளது. இதன் காரணமாக பலர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பேகலியகொட மீன் வியாபார நிலையத்திற்கு வியாபார நடவடிக்கையின் பொருட்டு வந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இவர்களுடன் பழகியவர்கள், நெருங்கிய உறவுகள் என்ற அடிப்படையில் பி.சி.ஆர். பரிசோதனைகள் பெறப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக் காணப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக வாழைச்சேனை மீன்பிடி துறைமுகம் மூடப்பட்டுள்ளதால், கல்குடாத்தொகுதியிலுள்ள மீனவர்கள் முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மீனவர்கள் தனிமைப்படுத்தலுக்குட்பட்ட நிலையில் வீடுகளில் காணப்படுகின்றனர்.
இவர்களின் அன்றாட வாழ்க்கையை நடாத்துவதற்கு பாரிய இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில், அரசாங்கத்தினால் அன்றாடத்தொழிலின்றி வாழும் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபாய் நிதியுதவியினை வழங்கி வருகின்றனர். ஆனால், இவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு இந்த உதவி போதுமானதாக இல்லையென மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக, மீனவர்கள் பிடிக்கப்பட்ட மீன்கள் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட மீன்கள் அனைத்தும் ஆற்றில் வீசப்பட்டதாகவும், சிலவற்றை கருவாடு போட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக மீனவர்கள் பெரிதும் நஷ்டமடைந்துள்ளனர். பெரும்பாலும் மீனவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் தங்களது தொழிலை மேற்கொள்ள இயற்கை அனர்த்தமும் வழிவிடவில்லை என்றும், இதனால் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் மீனவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்நாட்டின் ஜனாதிபதி கல்குடாத்தொகுதியில் வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தினை அண்டியதாக சுமார் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ், முஸ்லிம் மீனவ சமூகத்தினரின் கஷ்ட நிலைமையினை கருத்திற்கொண்டு உடனடியாக இவர்களின் கஷ்டத்தினைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மீனவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

No comments:

Post a Comment